அரசியல்

உறுப்புக் கட்சிகளின் கடினமான உழைப்பிற்கு நெங்கிரி வெற்றி உத்வேகம் அளித்துள்ளது 

18/08/2024 04:38 PM

புத்ராஜெயா,18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி பெற்ற வெற்றி ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் உறுப்புக் கட்சிகள் தொடர்ந்து கடினமாக உழைப்பதற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 

எதிர்க்கட்சிகளின் கோட்டையில் போட்டியிட்டாலும் மலாய் மற்றும் பூர்வகுடி சமூகங்களின் ஆதரவை ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் உறுப்புக் கட்சிகள் பெற்றுள்ளதற்கு இந்த ஆச்சரியமான முடிவு சான்றாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். 

''அதாவது, மக்கள் சாடுதல், சபித்தல் மற்றும் அவதூறான அரசியலை நிராகரித்து, கிளாந்தனில், பாஸ் மற்றும் பெர்சத்து கோட்டைகளில் உள்ள மலாய் மற்றும் பூர்வகுடி சமூகங்களின் ஆதரவில் அம்னோவின் திறனை காண்கிறார்கள், இது புதிய உத்வேகத்தை அளிக்கும்,'' என்றார் அவர்.

இந்த இடைத் தேர்தலில், 3,372 வாக்குகள் அதிக பெறும்பாண்மையில் வெற்றி பெற்ற தேசிய முன்னணி வேட்பாளர் முஹமட் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கஃனிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்  இன்று புத்ராஜெயாவில் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். 

அதோடு, கடந்த ஆண்டு நடந்த மாநிலத் தேர்தலில் பெர்சத்து வசமான நெங்கிரி தொகுதியை மீண்டும் கைப்பற்ற முடிந்தது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 

இந்த வெற்றியை அடைவதில் கட்சியின் கேந்திரம் கடினமான பாதையை எதிர்கொண்டதை ஒப்புக்கொண்ட அன்வார், இந்த முடிவு நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். 

அதேவேளையில், ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் தலைமைதுவத்தை மக்கள் நிராகரிப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் கூற்றையும் இந்த முடிவு மறுத்துள்ளது என்று அன்வார் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)