பொது

ஐவரை காயப்படுத்தி கொள்ளையடித்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு

20/08/2024 03:48 PM

ஈப்போ, 20 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இம்மாதம் ஆகஸ்ட் எட்டாம் தேதி, இரு ஆண்கள் மற்றும் மூன்று பெண்களிடம் கொள்ளையடித்து காயப்படுத்தியதாக குத்தகையாளர் மற்றும் அவரது ஊழியர் மீது இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி ஹில்மியா யூசோஃப் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட லிங் சியாவ் ஹொக் மற்றும் அல்சன் இக் கய் ஜுன் அதனை மறுத்து விசாரணைக் கோரினர்.

அவர்கள் இருவரும் இதர இரு நபர்களுடன் இணைந்து இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மஞ்சோங் மாவட்டத்தில் ஆயிர் தாவார், ஜாலான் மெலாயுவில் உள்ள வீடொன்றில் அதிகாலை மணி 1.30 அளவில் பாதிக்கப்பட்ட ஐவருக்கு அவர்கள் வேண்டுமென்ற காயங்களை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 394 மற்றும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 34-இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கூடுதல் நிபந்தனைகளுடன் முதல் நபரை 12,000 ரிங்கிட் மற்றும் இரண்டாவது நபரை பத்தாயிரம் ரிங்கிட் ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் முடிவு செய்தது.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]