பொது

விரிவான வியூகக் கூட்டமைப்புக்கு மலேசியா, இந்தியா இருவழி உறவுகளை மேம்படுத்தும் - அன்வார்

20/08/2024 07:51 PM

புதுடெல்லி, 20 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தப்பட்ட வியூக கூட்டமைப்பு, ESP-இல் இருந்து விரிவான வியூக கூட்டமைப்பு, CSP-க்கு உயர்த்துவதற்கு மலேசியாவும் இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், CSP-க்கு உயர்த்தும் அவ்விரு நாடுகளின் கூட்டு முடிவு, ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிப்பதாக கூறினார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தலைமைத்துவம் முதலே, மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால உறவை தாம் மதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதோடு, பல்வேறு துறைகளில் இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

''இலக்கவியல் முதலீடு, வர்த்தகம், கட்டுமானம், விவசாயம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் இராணுவ ஒத்துழைப்பு, எல்லையை பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு துறைகளில் அது வலுப்படுத்தப்பட வேண்டும்.''

புதுடெல்லி, ஹைதராபாத் ஹவுஸ்-இல் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அன்வார் அவ்வாறு கூறினார்.

முன்னதாக, 2015-ஆம் ஆண்டு மோடியின் மலேசியப் பயணத்தின்போது, மலேசியா-இந்தியா இருவழி உறவுகளின் நிலை ESP க்கு மேம்படுத்தப்பட்டது.

தங்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பிற்கு, மோடிக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்த அன்வார், இந்தியாவை சிறந்த மற்றும் உண்மையான நண்பராக மலேசியா கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)