மலேசியா-இந்தியா வர்த்தகங்களில் தத்தம் நாணயங்களைப் பயன்படுத்த அன்வார் ஆதரவு

21/08/2024 06:21 PM

புது டெல்லி, 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலேசியா-இந்தியா வர்த்தகங்களில் தத்தம் நாணயங்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் எனும் பரிந்துரைக்கு, பிரதமர் அன்வார் இப்ராஹிம் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையிலான மலேசியாவின் வர்த்தக வெற்றியடைந்திருப்பதை சான்றாகக் கொண்டு, இருதரப்பு வர்த்தகத்தின் வளர்ச்சிக்காக இந்திய ரூபாய் மற்றும் ரிங்கிட்டின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க பேங்க் நெகாரா மலேசியாவும் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பழைய பணவியல் செயல்முறையை மட்டுமே சார்ந்திருக்காமல், இன்னும் அதிகமான உலக நாடுகள் தங்களின் சொந்த நாணயங்களை வர்த்தகத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

இந்தியா-மலேசியா வர்த்தகத்தில் மேம்பாடு அடைந்து வருவதால், தற்போது இந்திய ரூபாய் மற்றும் மலேசிய ரிங்கிட்டைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளார்.

இருவழி வர்த்தகம் மற்றும் முதலீட்டில், உள்நாட்டு நாணயப் பயன்பாட்டை ஊக்குவிக்க, இந்திய Reserve வங்கியும் பேங்க் நெகாரா மலேசியாவும் மேற்கொண்டிருக்கும் ஒத்துழைப்பை வரவேற்பதாக இரு தலைவர்களும் கூறினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)