பொது

இணையம் வழியான பாதுகாப்பு சட்ட மசோதா அக்டோபரில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்

22/08/2024 06:50 PM

கோலாலம்பூர், 22 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இணையம் வழியான பாதுகாப்பு சட்ட மசோதா வரும் அக்டோபர் மாதத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் வழி தொடர்பு அமைச்சு அதன் செயல்பாட்டு மற்றும் அமலாக்க பணிகளை மேற்கொள்ளும் என்று சட்ட மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

இன்று, கோலாலம்பூரில், உள்ள உலக வாணிப மையத்தில் 2024ஆம் ஆண்டு அம்னோ பொதுக் கூட்டத்தின்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக சம்பந்தப்பட்ட அச்சட்ட மசோதாவை அரச மலேசிய போலீஸ் படை, தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் ஒத்துழைப்புடன் சட்ட மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சு ஆராய்ந்து வருவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, அரசியல் மற்றும் கட்சிகளின் பிரச்சாரத்திற்கு சமூக ஊடகங்கள் முக்கிய பங்காற்றும் நிலையில், மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அம்னோ உறுப்பினர்கள் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று அதன் தகவல் பிரிவுத் தலைவருமான அசாலினா வலியுறுத்தினார்.

அண்மையில் நடைபெற்ற கிளாந்தான், நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோ வெற்றி பெற்றதன் வழி இது நிரூபிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)