பொது

நிலத்தடி சுரங்கப் பாதையை புதுப்பிக்கும் பணிகளுக்கு 4 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

23/08/2024 08:54 PM

சிரம்பான், 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- முதலாவது பேருந்து நிலைய முனையத்தையும் சிரம்பான் ரயில் நிலையத்தையும் இணைக்கும் நிலத்தடி சுரங்கப் பாதையை மேம்படுத்தி, புதுப்பிக்கும் பணிகளுக்காக, நான்கு லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டை, ரயில்வே சொத்து கழகம், RAC வழங்கியிருக்கின்றது.

அந்நடைப்பாதை, நல்ல நிலையில் இருப்பதோடு, பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்வதற்கு, 2008-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட 15 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்த சுரங்கப் பாதை, அவசியம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லோக் தெரிவித்தார்.

பயனீட்டாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் சுரங்கப் பாதை மற்றும் நடைபாதைக்கு மதிப்பு மற்றும் மறுசீரமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான நிலைத்தன்மை ஆய்வில் அவ்விவகாரம் கண்டறியப்பட்டதாக சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

''அதனை நிறைவுசெய்ய ஏறக்குறைய நான்கு மாதங்கள் தேவைப்பட்டது. கடந்த ஜூன் 28-ஆம் தேதி அதன் சீரமைப்பு பணிகள் முழுமையடைந்தன. இதன்வழி,  சிரம்பான் நகரத்திற்கு குறிப்பாக இளையோருக்கு ஈர்ப்புமிக்க இடமாக அது மாறும்,'' என்றார் லோக்.

RAC-யைத் தவிர்த்து, சிரம்பான் மாநகராண்மைக் கழகம், MBS, Keretapi Tanah Melayu நிறுவனம், KTMB மற்றும் Think City போன்ற வியூக பங்காளிகளும் இத்திட்டத்தின் வெற்றிக்கு பங்காற்றி உள்ளதாக, இன்று அந்த சுரங்கப் பாதையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும்போது, அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)