பொது

விமானப் பயண டிக்கெட்டுகள் தொடர்பான இரு திட்டங்களைத் தொடர அமைச்சரவை இணக்கம்

03/09/2024 08:04 PM

சிப்பாங், 3 செப்டம்பர் (பெர்னாமா) -- விமானப் பயண டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வழங்கப்படும் உதவித் தொகை தொடர்பான இரு திட்டங்களைத் தொடர அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

FLYsiswa எனப்படும் தீபகற்பத்தில் இருந்து சபா, சரவாக் மற்றும் லாபுவானுக்கு பயணிக்கும் உயர் கல்வி கழக மாணவர்களுக்கு விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கான உதவித் தொகையைத் தொடர்ந்து வழங்குவது.

பண்டிகைக் காலத்தின்போது, தீபகற்பத்தில் இருந்து சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் உச்சவரம்பு விலையை 599 ரிங்கிட்டாக நிலைநிறுத்துவதும் அதில் ஒன்றாகும்.

''FLYsiswa திட்டம் வழியாக தகுதிப் பெற்ற சபா, சரவாக் மற்றும் தீபகற்பத்தில் பயிலும்  மாணவர்களுக்கு, விமானப் பயணத்திற்கான 300 ரிங்கிட் உதவித் தொகை  வழங்கப்படும்.''

''ஆகவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசாங்கம் அந்த உதவியைச் செய்யும். சபா சரவாக் மாநிலங்களும் அதன் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கும். இது மாணவர்களின் சுமையைக் குறைக்கும்,'' என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, பண்டிகைக் காலத்தின்போது விமான டிக்கெட்டுகளுக்கான உச்சவரம்பு விலைக் கொள்கையை நிலைநிறுத்துவதற்கும் அமைச்சரவை இணங்கியுள்ளது.

பண்டிகைக் காலத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, தீபகற்பத்தில் இருந்து சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கும் செல்லும் அனைத்து விமானங்களுக்கும் உச்சவரம்பு கட்டணத்தை அரசாங்கம் நிர்ணயம் செய்யும் என்று லோக் குறிப்பிட்டார்.

இன்று, சிப்பாங்கில் Capsule Transit MAX எனும் தங்கும் விடுதியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)