பொது

சிறுமியின் காணொளியையும் புகைப்படத்தையும் வெளியிட்ட பள்ளிப் பேருந்து ஓட்டுநர் கைது

06/09/2024 07:41 PM

கோலாலம்பூர், 06 செப்டம்பர் (பெர்னாமா) -- தமது பேருந்தில் ஏற்றிச் செல்லும் சிறுமியின் காணொளி மற்றும் புகைப்படத்தை பதிவேற்றிய பள்ளி பேருந்து ஓட்டுநர் நேற்று பின்னேரத்தில் குளுவாங், சிம்பாங் ரெங்காமில் கைது செய்யப்பட்டார்.

உள்நாட்டைச் சேர்ந்த அந்த 24 வயதான அவ்வாடவரைப் பின்னிரவு மணி 2.57 அளவில், போலீஸ் குழு ஒன்று கைது செய்ததோடு, விசாரணைக்கு உதவும் பொருட்டு அவரின் கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் சிபி எம். குமார் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட காணொளி பதிவில் சிறுமியின் பெற்றோர் விசாரணைக்கு உதவ முன்வருவதை போலீசார் வரவேற்பதாகவும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் M Kumar கூறியிருந்தார்.

2017-ஆம் ஆண்டு சிறார் மீதான பாலியல் குற்றச் சட்டம் செக்‌ஷன் 15 உட்பிரிவு a மற்றும் உட்பிரிவு iii-இன் கீழ் மற்றும் 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம் செக்‌ஷன் 15 உட்பிரிவு இரண்டின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

பள்ளிப் பேருந்து ஓட்டுநர் தமது டிக்டோக்கில் வெளியிட்டிருந்த அப்பதிவை, X சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தும் நபர் ஒருவர், பகிர்ந்ததோடு, அதில் இருந்த ஒரு மாணவியை தமது மனத்திற்கு நெருக்கமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் Datuk Seri Nancy Shukri, பேருந்து ஓட்டுநர் மீது போலீசில் புகார் செய்யுமாறு சிறார் மேம்பாட்டுத் துறைக்கு ஜேபிகேகே-க்கு உத்தரவிட்டார்.

இதனிடையே, பெற்றோரின் அனுமதியின்றி பிள்ளைகளின் படங்கள் அல்லது காணொளிகளைப் பகிரும் செயலை இயல்பாகவே ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அது 2001-ஆம் ஆண்டு சிறார் தனியுரிமைச் சட்டத்தை மீறுவதாகவும் அர்த்தப்படும் என்று நேன்சி நினைவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)