பொது

அனைத்து நாடுகளுடன் சுமூகமான உறவை மேற்கொள்ள மலேசியா விருப்பம்

12/09/2024 07:49 PM

லாஹாட் டத்து, 12 செப்டம்பர் (பெர்னாமா) --  உலக நாடுகளுடன் நல்லிணக்கத்தை உருவாக்குவது உட்பட, நாட்டிற்கும் மக்களுக்கும் எது சிறந்தது என்பதை தீர்மானிப்பதில் மலேசியா முழு சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறது.

மலேசியா அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேண விரும்புவதாகவும், குறிப்பிட்ட சில  நாடுகளுடன் அரசதந்திர உறவைக் கொண்டிருக்க எந்தத் தரப்பும் நாட்டிற்கு அழுத்தம் தரக்கூடாது என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.   

அண்மையில், ரஷ்யாவிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருந்த அன்வார், அதன் அதிபர் விளாடிமிர் புதின் உடனான தமது சந்திப்பு கோலாலம்பூருக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று தெரிவித்தார். 

அதுமட்டுமின்றி, மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதியை ரஷ்யா அதிகரிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

''நான் அதிபர் புதினை சந்தித்தேன். பலரும் பல கருத்துகளை வெளியிட்டனர். ரஷ்யாவுடன் நட்பாக இருக்க மலேசியா விரும்பவில்லை. அமெரிக்கா எப்படி? ஐரோப்பா எப்படி? நாம் சுதந்திரமும் விடுதலையும் அடைந்த நாடு. நாட்டிற்கு எது சிறந்ததோ அந்த முடிவை நாம் எடுப்போம். நாம் அனைத்து நாடுகளுடனும் நல்லிணக்கத்தில் இருக்க விரும்புகிறோம். ஆனால், எந்தவொரு நாடும் நமக்கு அழுத்தம் தரக்கூடாது. நீங்கள் இந்த நாடுடன் நட்பில் இருக்கக்கூடாது, அந்த நாடுடன் நட்பில் இருக்கக்கூடாது என்று அழுத்தம் தரக்கூடாது. யார் முடிவு செய்வது? மலேசியா. யார் முடிவு செய்வது? மக்கள். எதற்காக? நமது நன்மைக்காக,'' என்று அவர் தெரிவித்தார்.

இன்று, சபா, லாஹாட் டத்துவில் 'அனைத்தும் ஃபெல்டா' எனும் கண்காட்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றும்போது பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)