ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்கும் பரிந்துரை ஏற்புடையதல்ல

12/09/2024 07:44 PM

கோலாலம்பூர், 12 செப்டம்பர் (பெர்னாமா) -- முஸ்லிம் அல்லாத உணவகங்கள் ஹலால் சான்றிதழைக் கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏற்புடையது அல்ல.

ஹலால் சான்றிதழ் தொடர்பாகத் தெளிவான விளக்கம் வழங்கப்படாத நிலையில், ஹலால் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பரிந்துரை, உணவக உரிமையாளர்களுக்குப் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனம், KLSICCI-யின் தலைவர் நிவாஸ் ராகவன் கூறினார்.

ஹலால் சான்றிதழ் தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படுவதற்கு முன்னர், இதில் தொடர்புடைய தரப்பினருடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்று நிவாஸ் ராகவன் கேட்டுக் கொண்டார்.

''ஹலால் சான்றிதழின் வழி நன்மைகள் உள்ளன. ஆனால் அதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். அரசாங்கம் பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். கருத்துகளைப் பெற வேண்டும். உணவு சார்ந்த தொழில் நடத்துநர்கள் இதை எவ்வாறு அமல்படுத்த வேண்டும் மற்றும் அவர்களுக்கு போதிய கால அவகாசம் உதாரணத்திற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வழங்க வேண்டும்,'' என்று அவர் கூறினார்.
 
ஹலால் சான்றிதழின் அமலாக்கத்திற்கு முன்பு, அது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கும் தொழில் நடத்துநர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

''ஹலால் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகள் என்ன? உணவு தயார்நிலை, உணவை விநியோகித்தல், உணவகங்களின் அமைப்பு. இவ்வாறு அதிகமான அம்சங்கள் இருப்பதால், ஹலால் சான்றிதழை கட்டயமாகப் பெற்றிருக்க வேண்டும் என்று நெருக்குதல் அளிக்க முடியாது,'' என்று அவர் தெளிவுபடுத்தினார்.

ஹலால் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறு என்றாலும், ஹலால் சான்றிதழ் வழி நன்மைகள் இருப்பதையும் அவர் மறுக்கவில்லை.

''மலேசியாவில் உள்ள உணவகங்களில்  ஹலால் சான்றிதழ் இருப்பதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக முஸ்லீம் அல்லது மலாய்க்காரர்கள், சுற்றுப்பயணிகள் அதிகமானோர் உணவகங்களில் உணவை வாங்கலாம். வியாபாரமும் அதிகரிக்கும்,'' என்று அவர் கூறினார்.

மேலும், மலேசியாவின் ஹலால் சான்றிதழுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் இது வழிவகுக்கும் என்று நிவாஸ் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)