பொது

சிறார் மீட்கப்பட்ட விவகாரம்; விரிவான விசாரணையை விரைந்து மேற்கொள்ள போலீசுக்கு மாமன்னர் உத்தரவு

17/09/2024 03:43 PM

கோலாலம்பூர், 17 செப்டம்பர் (பெர்னாமா) -- ஜி.ஐ.எஸ்.பி.எச் எனப்படும் 'Global Ikhwan Service and Business' நிறுவனத்தை தொடர்புப்படுத்திய தொண்டு இல்லங்களில் நிகழ்ந்திருக்கும் சிறார் வன்கொடுமை தொடர்பில், உடனடியாக விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம்-இற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்தத் தொண்டு இல்லம் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியானதை அடுத்து, இவ்விவகாரத்தைத் தாம் கடுமையாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

இவ்விவகாரம் குறித்து இன்று தமது அதிகாரப்பூர்வ முகநூலில் கருத்து பதிவிட்டிருந்த மாமன்னர், முழுமையான விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி இருந்தார்.

அதுமட்டுமின்றி, இஸ்லாமியர்களின் நம்பிக்கை தொடர்பான விவகாரங்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவற்றை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் சுல்தான் இப்ராஹிம் பதிவிட்டிருந்தார்.

மேலும், மதப் பிரச்சனைகள் தொடர்பான எந்தவொரு அறிக்கையையும் அல்லது கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்டிய அவர், இது மிகவும் உணர்வுப்பூர்வ விவகாரம் என்பதால் கவனமாகவே இதை கையாள வேண்டும் என்றும் ஆலோசனைக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)