பொது

ஐசிபி-ஐ தவறாகப் பயன்படுத்திய 104 வாகனங்கள் மீது ஜேபிஜே நடவடிக்கை

17/09/2024 05:09 PM

கோத்தா பாரு, 17 செப்டம்பர் (பெர்னாமா) -- அனைத்துலக விநியோக அனுமதியான ஐ.சி.பி-ஐ தவறாகப் பயன்படுத்தியது உட்பட 90 நாட்கள் மட்டுமே நாட்டில் இருப்பதற்கு அனுமதி பெற்றிருந்த வாகனங்கள் மூன்றாண்டுகள் வரையில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக, 104 வாகனங்கள் மீது சாலைப் போக்குவரத்துத் துறை ஜேபிஜே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கிளந்தான் வழியாக தாய்லாந்து வாகனங்கள் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நுழைந்தது, ஐ.சி.பி-க்கு பதிவு செய்யாதது, போலியான பதிவு எண்ணை கொண்டிருப்பது போன்ற இதர குற்றங்களும் இதில் உட்படுத்தப்பட்டிருப்பதாக ஜேபிஜே மூத்த அமலாக்க இயக்குநர் முஹமட் கிஃப்ளி மா ஹசான் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கி நேற்று வரையில், ரந்தாவ் பஞ்சாங் மற்றும் புக்கிட் பூஙா எல்லைப் பகுதிகளில் கிளந்தான் மாநில ஜேபிஜே மேற்கொண்ட சிறப்பு ஓப்ஸ் நடவடிக்கையின் மூலமாக இக்குற்றங்கள் கண்டறியப்பட்டன.

''ஐசிபி-க்கு பதிவு செய்யாமல் தாய்லாந்திலிருந்து நுழைந்த வாகனங்கள் குறித்த குற்றமே கடுமையானதாகக் கருதப்படுகிறது. இரண்டு கிலோமீட்டர் தூர அளவிற்கு நாட்டிற்குள் நுழைய வழங்கப்பட்ட தளர்வை அவர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர்,'' என்றார் அவர்.

இச்சிறப்பு நடவடிக்கையின்போது, ​​தாய்லாந்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தைத் தாண்டிய 484 வாகனங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவற்றில், 104 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 55 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முஹமட் கிஃப்ளி கூறினார்.

மேலும், தாய்லாந்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு எதிரான அமலாக்கத்தைக் கடுமையாக்குமாறு கெடா, பெர்லிஸ், பேராக் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஜேபிஜே-விற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)