அரசியல்

மக்கோத்தா: தேர்தல் முடிவுகள் இரவு மணி 9-க்குள் அறிவிக்கப்படலாம்

28/09/2024 06:01 PM

குளுவாங், 28 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று நடைபெற்ற மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவு இன்றிரவு மணி ஒன்பதுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அருகில் அமைந்திருக்கும் வாக்குச் சாவடிகள் மற்றும் சுமூகமான வாக்களிப்பு செயல்முறை ஆகியவற்றின் அடிப்படையில், எதிர்பார்த்ததைக் காட்டிலும் தேர்தல் முடிவுகள் விரைவாக அறிவிக்கப்படலாம் என்று தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்தார்.

''குளுவாங்கில் போக்குவரத்து சற்று எளிமை. அதோடு, வாக்களிப்பு மையங்கள் அனைத்தும் நகர் புறத்திற்கு அருகே அமைந்துள்ளன. எனவே, இரவு மணி ஒன்பதுக்குள் அறிவிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,'' என்றார் அவர்.

இன்று, ஜுப்லி இந்தான் சுல்தான் இப்ராஹிம் மண்டபத்தில் நடைபெற்ற வாக்களிப்பு செயல்முறையைப் பார்வையிட்டப் பின்னர் ரம்லான் செய்தியாளர்களிடம் பேசினார்.

நடந்து முடிந்த வாக்களிப்பு செயல்முறை மிகவும் சுமூகமாக அமைந்ததோடு எவ்வித அசம்பாவிதங்களும் நடந்திராததால் எஸ்.பி.ஆர் மனநிறைவுக் கொள்வதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)