உலகம்

லெபனானில் வான்வழி தாக்குதல்; 24 மணி நேரத்தில் 28 மருத்துவ பணியாளர்கள் பலி

04/10/2024 06:28 PM

ஜெனீவா, 04 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த 24 மணி நேரத்தில், லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களால் பணியில் இருந்த 28 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் தாக்குதல் தீவிரமடைந்து வருவதால், பணிக்குச் செல்வதையும் மருத்துவ பணியாளர்கள் தவிர்த்து வருவதாக உலக சுகாதார நிறுவனம், WHO தலைவர் தெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசுஸ் தெரிவித்தார். 

''தெற்கு லெபனானில், 37 சுகாதார மையங்கள் மூடப்பட்டுள்ளன. பெய்ரூட்டில் ​​மூன்று மருத்துவமனைகளில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை முழுமையாக வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் இரண்டு மருத்துவமனைகளில் பகுதியளவில் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் உட்பட சுகாதார மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள், மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான நிலைமைகளின் கீழ் மிகவும் குறைவான பொருட்களுடன் பணியாற்றி வருகின்றனர். இன்னும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறது,'' என்று அவர் கூறினார்,

நிலைமை மோசமாகி வருவதால், மருத்துவ ஊழியர்களுக்கு வலுவான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

லெபனானுக்கு செல்ல கட்டுப்பாடுகள் உள்ளதால் மருத்துவப் பொருட்கள் உட்பட போதிய உதவிப் பொருட்களை அனுப்ப சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெட்ரோஸ் கூறினார்.

கடந்த ஆண்டு தொடங்கி, லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களால், 127 குழந்தைகள் உட்பட மொத்தம் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 9,384 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]