பொது

தாவாவ் விமான நிலையம் மேம்படுத்தப்படும்

07/10/2024 07:26 PM

தாவாவ், 07 அக்டோபர் (பெர்னாமா) -- சபாவில் உள்ள தாவாவ் விமான நிலையம் மேலும் விசாலமாகவும், முழு குளிரூட்டி வசதியுடனும் மேம்படுத்தப்படும்.

அதற்காக, மதிப்பீடு செய்வதற்கு 16 குத்தகை நிறுவனங்களை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளதோடு, முதன்மை குத்தகையாளரை நியமிக்கும் செயல்முறை அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

செம்போர்னா போன்ற சுற்றுலா இடங்களுக்கு நுழையும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தாவாவ் விமான நிலையத்தில் ஏற்படும் நெரிசல் பிரச்சனை குறித்து தங்கள் தரப்பு அறிந்துள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இந்த விமான நிலையத்தில் ஓராண்டிற்கு 15 லட்சம் சுற்றுப்பயணிகள் நுழையலாம்.

ஆனால், 2023ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்திற்கு 17 லட்சத்து 10 ஆயிரம் சுற்றுப்பயணிகளின் நுழைவு பதிவு செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

சரக்குகளும் 2019ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் டன்னைக் காட்டிலும் 13,000 மெட்ரிக் டன்னாக பதிவாகியுள்ளது.

இந்தச் சீரமைப்பு பணிகளுக்கு 13 கோடி ரிங்கிட் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள வேளையில், இத்திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கி, மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)