பொது

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள்

18/10/2024 07:47 PM

கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜி.டி.பி-இன் வளர்ச்சி 4.8 விழுக்காடு முதல் 5.3 விழுக்காட்டிற்குள் வலுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள வேளையில் பணவீக்க விகிதம் 2024 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குறைந்து 1.9 விழுக்காடாக நிலைத்திருக்கும் என்றும் பிரதமர், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைச் செலவுகளை எளிதாக்கும் முயற்சிகளில் மடானி அரசாங்கம் தொடர்ந்து முயன்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி நாட்டில் வேலையின்மை விகிதம் 3.2 விழுக்காடு குறைந்துள்ளதாகவும், இது ஜனவரி 2020-ஆம் ஆண்டு தொடங்கி பதிவிடப்பட்டிருக்கும் மிகக் குறைந்த விகிதம் என்றும் பிரதமர் கூறினார்.

2025 வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு 6,410 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது, இதுவும் வரலாற்றில் மிக அதிகமான ஒதுக்கீடு ஆகும்.

2025-ஆம் ஆண்டு மத்தியில் ரோன் 95 வகை பெட்ரோலுக்கு இலக்கிடப்பட்ட உதவித் தொகையை மேற்கொள்ள அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது.

இந்த இலக்கிடப்பட்ட உதவித் தொகையின் வழி சேமிக்கப்படும் நிதி மக்களின் நல்வாழ்விற்கு பயன்படுத்தப்படும் என்று அன்வார் கூறினார்.

அரசாங்க நிறுவனங்களின் கீழ், கடனுதவி வசதி மற்றும் வர்த்தக கடனுதவி உத்தரவாதமாக அரசாங்கம் 4000 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.

உணவு உத்தரவாதம், எரிசக்தி பரிமாற்றம் மற்றும் இலக்கவியல் போன்ற துறைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்பாட்டில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அன்வார் தெரிவித்தார்.

"அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, 8,800 ஏக்கர் தரிசு நிலத்தை, வட்டார வளர்ச்சி வாரியங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான, வளர்ப்பு கோழி மற்றும் கால்நடை நிறுவன விவசாயத் திட்டங்களைச் செயல்படுத்தப் பயன்படுத்தும்," என்றார் அவர்.

மற்றொரு நிலவரத்தில், வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மாவுக்கு 60 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)