உலகம்

பெரு முன்னாள் அதிபர் அலியன்ட்ரோவிற்கு 20 ஆண்டுகள் சிறை

22/10/2024 05:01 PM

லிமா, 22 அக்டோபர் (பெர்னாமா) -- பிரேசில் கட்டுமான நிறுவனமான ஒடேபிரெச்சி சம்பந்தப்பட்ட வழக்கில் பெரு முன்னாள் அதிபர் அலியன்ட்ரோ தொலெடோவிற்கு 20 ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாட்டில் நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கு அனுமதி அளிக்க ஒடேபிரெச்சி நிறுவனத்திடம் இருந்து மூன்று கோடியே 50 லட்சம் டாலர் கையூட்டு பெற்றதாக தொலெடோ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஒடேபிரெச்சி, அரசாங்க அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் லட்சக்கணக்கான டாலர் கையூட்டு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை பெருவை ஆட்சி செய்த தொலெடோவை அமெரிக்காவிடம் இருந்து நாடு கடத்த முடியுமா என்ற விவகாரம் உட்பட, லிமாவில் உள்ள சிறப்பு குற்றவியல் நீதித்துறையின் தேசிய உச்ச நீதிமன்றம், பல ஆண்டுகள் சட்டப் பிரச்சனைக்குப் பிறகு இத்தண்டனையை விதித்தது.

லத்தின் அமெரிக்காவின் மிக முக்கியமான சில உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கிய ஒடேபிரெச்சி கையூட்டு வழங்கி அரசாங்க ஒப்பந்தங்களை வாங்கியதாக 2016-இல் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டது.

அமெரிக்க நீதித்துறையின் விசாரணை மெக்சிக்கோ, குவாட்டமாலா மற்றும் எக்குவாடோர் உட்பட பல நாடுகளின் விசாரணையையும் உள்ளடக்கி இருந்தது.

பெருவில், தொலெடோவும் மூன்று முன்னாள் அதிகாரிகளும் கட்டுமான நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]