பொது

24 மணி நேரமும் முழுமையான சமூக பாதுகாப்பு வழங்கும் புதிய கட்டமைப்பை பெர்கேசோ ஆராயும்

24/10/2024 05:23 PM

கோலாலம்பூர், 24 அக்டோபர் (பெர்னாமா) -- வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டு நாளொன்றுக்கு 24 மணி நேரமும் முழுமையான சமூக பாதுகாப்பு வழங்கும் புதிய கட்டமைப்பை பெர்கேசோ எனப்படும் சமூக பாதுகாப்பு அமைப்பு ஆராய்ந்து வருகிறது.

சரிசமமற்ற இடைவெளியை நெருக்கமாக்குவதற்கும் பாதுகாப்பு வழங்கப்படுவதில் இருந்து எந்தவொரு ஊழியரும் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்யவும் இந்தப் புதிய கட்டமைப்பு உதவும் என்று மனிதவள துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமட் தெரிவித்தார். 

அதேவேளையில், 1969-ஆம் ஆண்டு ஊழியர் சமூக பாதுகாப்பு சட்டம், 2017-ஆம் ஆண்டு தனிநபர் ஊழியர் சமூக பாதுகாப்பு சட்டம், 2022ஆம் ஆண்டு இல்லத்தரசி சமூக பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ், தகுதிபெற்ற காப்புறுதி பெற்றவர்களுக்கு ஊழியர் பேரிடர் திட்டம் மற்றும் உடல் குறைபாடு திட்டம் போன்றவற்றின் வழி சமூக பாதுகாப்பு காப்புறுதியை பெர்கேசோ ஏற்படுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

''வேலை பேரிடர் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பலன்களில், மருத்துவ வசதி, தற்காலிக உடல் குறைபாடு வசதி, நிரந்தர உடல்  குறைபாடு வசதி, பராமரிப்பில் இருப்பவர்களுக்கான வசதி, வழக்கமான சேவை அலவன்ஸ், சடல நிர்வகிப்பு வசதி, உடல் அல்லது தொழில்சார் மறுவாழ்வு வசதிகள் ஆகியவை அடங்கும். உடல் குறைபாடு திட்டத்தின் கீழ் உடல் குறைபாடு ஓய்வூதிய வசதி, உடல் குறைபாடு உதவி, உடல் அல்லது தொழில்சார் மறுவாழ்வு வசதிகள், வேலைக்கு மீண்டும் திரும்புதல் அல்லது ரத்த சுத்திகரிப்பு வசதி, சடல நிர்வகிப்பு வசதி, கல்வி வசதி மற்றும் மருத்துவ வசதி,'' என்றார் அவர்.

தனியார் சுகாதார காப்புறுதியைப் பெறுவதற்கான வசதியைக் குறைத்திருக்கும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைத் தொடர்ந்து, குறைந்த வருமானம் பெரும் ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான முழுமையான சமூக காப்புறுதி திட்டம் தொடங்கப்படும் தேதி குறித்து பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)