பொது

'SEXUAL GROOMING' குழுக்கள் சமூக ஊடகங்களில் இயங்கி வருவது தொடர்பான புகார்களை எம்சிஎம்சி பெற்றுள்ளது

26/10/2024 06:08 PM

கோலாலம்பூர், 26 அக்டோபர் (பெர்னாமா) -- 'Sexual Grooming' எனப்படும் சிறார்களை பாலியல் உறவிற்கு தயார்படுத்தும் குற்றங்களை மேற்கொள்ளும் குழுக்கள், சமூக ஊடகங்களில் இயங்கி வருவது தொடர்பான புகார்களை, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி பெற்றுள்ளதை, தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான மேல் நடவடிக்கையை மேற்கொள்ள, மேதா நிறுவனம் மற்றும் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் கீழ் செயல்படும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பாலியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு, D11 ஆகிய தரப்புகளுடம் எம்சிஎம்சி ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் கூறினார்.

1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்‌ஷன் 233-இன் கீழ் விசாரிக்கப்படலாம் என்பதுடன், தொழில்நுட்ப தரப்பான எம்சிஎம்சி, சம்பந்தப்பட்ட அந்த சமூக ஊடக கணக்குகளின் சுயவிவரத் தரவுகளை வழங்குவதில் பி.டி.ஆர்.எம்-க்கு உதவும் என்று ஃபஹ்மி கூறினார்.

"அக்குழுவை கண்டறிய எம்.சி.எம்.சி, மேதா மற்றும் பி.டி.ஆர்.எம். குறிப்பாக டி11 குழுவுடன் ஒத்துழைத்து வருவதாக தெரிவித்துள்ளது. இரண்டாவது, அக்குழுவில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அடையாளம் காணப்படும் நிலையில், மூன்றாவதாக ஏதேனும் சட்டங்களை மீறும் குற்றங்கள் இருந்தால், பி.டி.ஆர்.எம் நடவடிக்கை எடுக்கும்,'' என்றார் அவர்.

பள்ளி மாணவர்களை உட்படுத்திய ஆபாச உள்ளடங்களை பகிரும் நோக்கில், 6,000 பேரை உறுப்பினராக கொண்ட முகநூல் பக்கம் ஒன்று செயல்படுவதாக நேற்று X தளத்தில் செயல்படும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மற்றொரு நிலவரத்தில், பேராக், தெலுக் இந்தானில், சீன நாட்டு தேசியக் கொடியை பறக்கவிட்டது தொடர்பான விவகாரம் குறித்து வினவப்பட்டபோது, விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கையை போலீசாரிடமே முழுமையாக ஒப்படைப்பதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரத்தின் முன்புறத்தில், அந்நிய நாட்டின் கொடியை ஏந்தி, பேரணியில் ஈடுபட்ட காணொளி பரவலாக பகிரப்பட்டது, 2012-ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை ஆகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)