பொது

இணைய வசதியை மேம்படுத்த புதிய தொழில்நுட்ப வளர்ச்சி ஆராயப்படும்

04/11/2024 05:29 PM

கோலாலம்பூர், 04 நவம்பர் (பெர்னாமா) -- இணைய வசதியை மேம்படுத்துவதற்கு, Low Earth Orbit, LEO செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் Direct to Device உட்பட புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி ஆராய்ந்து வருகிறது.

அந்த இணைய வசதியை வழங்குவதற்கான புதிய தொழில்நுட்பம் பயனீட்டாளர்களுக்கு குறிப்பாக புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு பயனளிக்கும் என்று தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

அந்நடவடிக்கை, நாடு முழுவதிலும் இணைய வசதியையும் தொடர்பு உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும் எம்.சி.எம்.சி-இன் உறுதிபாட்டில் ஒன்றாகும் என்று தியோ நி சிங் கூறினார்.

''இணைய வசதி பிரச்சனை குறித்து பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் எம்சிஎம்சி திரட்டிய தகவல் அடிப்படையில், தொடர் திட்டமிடலின் வழி, சில மேம்பாடுகள் செய்யப்படவிருக்கின்றன. வருங்காலத்தில் இரண்டாம் கட்ட ஜெண்டேலாவில் இணைக்க, தகுந்த இடத்தை அடையாளம் காண்பதும் அதில் அடங்கும்,'' என்றார் அவர்.

இணைய வசதியை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும் இடங்கள் மற்றும் மோசமான இணைப்புப் பிரச்சனையைக் கையாள செயற்கைக்கோள் அல்லது கோபுரம் போன்ற தற்போதைய தொழில்நுட்பம் வழியாக அதை சரிபார்ப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து இன்று மக்களவையில் ஜூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ லேரி சூன் @ லேரி செங் வெய் ஷீன் எழுப்பியக் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]