பொது

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய செயல்முறை பின்பற்றப்படும்

08/11/2024 04:29 PM

கோலாலம்பூர், 08 நவம்பர் (பெர்னாமா) -- இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல், அடுத்த ஆண்டு முதல் புதிய செயல்முறையைப் பயன்படுத்தும்.

இப்புதிய செயல்முறையில் ஈடுபாடு மற்றும் அமலாக்கம் குறித்து அனைத்து பொதுப் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் உயர்க் கல்விக் கழகங்கள், ஐ.பி.டி.எஸ்-உடன், நாடாளுமன்றம் தற்போது கலந்தாலோசித்து வருவதாக மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் செயல்முறை, பேராளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை ஆகியவை, இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்படும் மாற்றங்கள் ஆகும்.

நாடு தழுவிய அளவில், அனைத்து பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் உயர்க் கல்விக் கழகங்களிலில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் டான் ஶ்ரீ ஜொஹாரி விவரித்தார்.

அவற்றுடன், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு, கே.பி.எஸ்-இடமிருந்து முழுமையாக பெறப்பட்ட மறுசீரமைப்பை தற்போது தமது தரப்பு நெறிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

"இளைஞர் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும். ஆனால் நாங்கள் தற்போது புதிய செயமுறை அமலாக்காத்தை நெறிப்படுத்தி வருகிறோம். இதை எவ்வாறு விரிவுப்படுத்துவது என்று பல்கலைக்கழகங்களுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போது எங்களிடம் நூறு இடங்கள் உள்ளன. அதை 220 இடங்களாக அதிகரிக்க வேண்டும்," என்றார் அவர். 

இன்று நாடாளுமன்றத்தில், 'Parlimen: Tunjang Semak Imbang Negara' எனும் கருபொருளில் மூன்றாவது நாடாளுமன்ற கருத்தரங்கைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜொஹாரி அவ்வாறு கூறினார்.

இதனிடையே, இத்தகைய புதிய செயல்முறைகள், எதிர்காலத்தில், இளைஞர்கள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் குரலாக மக்களவையில் ஒலிப்பதற்கும் முதிர்ச்சியடைந்த தலைவர்களாக விளங்குவதற்கும் வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]