உலகம்

குரங்கம்மை பொது சுகாதார அவசரநிலையாக மாறியது - WHO

23/11/2024 05:24 PM

இஸ்தான்புல், 23 நவம்பர் (பெர்னாமா) -- உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய் தொற்று பொது சுகாதார அவசரநிலையாக மாறியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் WHO, தலைமை இயக்குநர் தெட்ரஸ் அடெனம் கெப்ரியெசஸ் அறிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து விவாதிக்க WHO அவசர செயற்குழு கூடியது.

அதிகரிக்கும் நோய் சம்பவங்கள், புவியியல் பரவல், களத்தின் செயல்பாட்டு சவால்கள், நாடுகளுக்கு இடையில் மற்றும் பங்காளி நாடுகளுடன் நிலையான ஏற்புத்தன்மையை உருவாக்கும் தேவை போன்ற அடிப்படை விவகாரங்களைக் கொண்டே அம்முடிவு எடுக்கப்பட்டதாக தெட்ரஸ் அடெனம் கெப்ரியெசஸ் தெரிவித்தார்.

நோய் பரவலைத் தடுக்கும் தங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்க, பாதிக்கப்பட்டு நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதோடு, இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வர அனைத்துலக மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெட்ரஸ் வலியுறுத்தினார்.

காங்கோவில் இருந்து அண்டை நாடுகளுக்கு உருமாறிய புதியத் தொற்று பரவியதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் உலக பொது சுகாதார அவசரநிலையை WHO அறிவித்திருந்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]