நிபோங் திபால், 14 டிசம்பர் (பெர்னாமா) - ஆசிரியை ஒருவர் தமது மாணவருக்கு உணவு ஊட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு மலேசியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
காற்பந்து போட்டியில் பங்கேற்ற பாலர் பள்ளியைச் சேர்ந்த தமது இந்திய மாணவருக்கு, ஜனோராஷிகின் ஜஸ்டி என்ற மலாய் ஆசிரியை உணவு ஊட்டும் காணொளி பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.
டிசம்பர் ஏழாம் தேதி, மலேசிய இந்திய காற்பந்து சங்கமான மீஃபா ஏற்பாட்டில் பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆறு வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கான, The MIFA Beyond Kids Cup எனும் காற்பந்து போட்டியின்போது இந்நிகழ்வு பதிவானதாக ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளியின், பாலர் பள்ளி மாணவர் நிர்வகிப்பு உதவியாளராகப் பணிபுரியும் ஜனோராஷிகின் தெரிவித்தார்.
அத்தினத்தில், அப்பாலர் பள்ளி காற்பந்து அணியின் நிர்வகிப்பாளராகப் பொறுப்பேற்றிருந்ததாகவும் அங்கிருந்தவர்களில் மலாய் இனத்தவராக அவர் மட்டுமே இருந்ததாகவும் ஜனோராஷிகின் கூறினார்.
அதனாலேயே, அக்காட்சி கவனத்தை ஈர்த்திருக்கலாம் என்று கூறிய அவர், தமது அச்செயல் பதிவு செய்யப்பட்டு பரவலாகப் பகிரப்பட்டதைத் தாம் அறியவில்லை என்பதை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
"முதலில் நான் மிகவும் நெகிழ்ந்தேன். அவற்றை படித்தவுடன் எனக்கு அழுகை வந்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏனெனில், நான் செய்த செயலுக்கு மக்கள் நல்ல விதத்திலும் நேர்மறையான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். எனவே, வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு நான் மிகவும் நெகிழ்கிறேன்,'' என்றார் அவர்.
வேறு இனம் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அம்மாணவர்களை நிர்வகிப்பதில் தாம் சிறிதும் அலட்சிம் காட்டியதில்லை என்று நான்கு பிள்ளைகளுக்கு தாயான அவர் குறிப்பிட்டார்.
வீட்டில் தமது பிள்ளைகளுக்குக் கொடுக்கும் அதே அன்பை அளித்து, தன் சொந்தப் பிள்ளைகள் போலவே தமது மாணவர்களையும் நடத்துவதாக ஜனோராஷிகின் தெரிவித்தார்.
இதனிடையே, ஜனோராஷிகினின் செயல் பாராட்டுக்குரியது மட்டுமின்றி அது அனைத்து கல்வியாளர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை எம்.கோகிலாம்பாள் கூறினார்.
"மாணவர்கள் மீது அவர் காட்டும் அன்பும் பரிவும் எனக்கே பலமுறை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே பண்பை அனைத்து ஆசிரியர்களும் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். வேற்றினத்த ஆசிரியராக இருந்தாலும் இந்திய மாணவர்களையும் தன் பிள்ளை போல் நினைத்டு அவர்களுக்கு ஊட்டிவிடுவது மிகவும் வரவேற்புக்குரிய செயலாகும்," என்று தலைமையாசிரியர் பாராட்டினார்.
நாட்டின் பல்லின மக்களின் ஒற்றுமை உணர்வையும் இது பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)