அலோர் ஸ்டார், 15 டிசம்பர் (பெர்னாமா) -- அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி கோலா கெடா மற்றும் கோலா பெர்லிஸிலிருந்து லங்காவிக்குச் செல்வதற்கான ஃபெரி சேவைக்கான பயணக் கட்டணம் உயர்த்தப்படடுவதாக அறிக்கை வெளியிட்டு,
12 மணிநேரம் கூட ஆகாத நிலையில் அந்த அறிக்கையை மீட்டுக் கொண்டுள்ளதோடு, கட்டணம் அதிகரிக்காது என்று லங்காவி ஃபெரி லைன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி கூறியிருக்கிறார்.
உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கான கட்டணம் உயத்தப்பட்டால், டீசல் உதவித் தொகையைப் பெறுவதற்கு ஃபெரி நிறுவனத்தார், தகுதி பெற மாட்டார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் எச்சரித்ததைத் தொடர்ந்து, அக்கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
வெளிநாட்டுப் பயணிகளுக்கான ஃபெரி கட்டண உயர்வு மட்டும், அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி அமல்படுத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் உயர் நிர்வாகி கேப்டன் டாக்டர் பஹரின் பஹரோம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, கோலா கெடா மற்றும் கோலா பெர்லிஸிலிருந்து லங்காவிக்குச் செல்வதற்கு இடையிலான
லங்காவி ஃபெர்ரி லைன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் ஃபெரி பயணக் கட்டணம் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி உயர்த்தப்படும் என்று ஓர் அறிக்கையின் வாயிலாக முன்னதாக அந்நிறுவனம் கூறியிருந்தது.
பயணிகளின் வகை மற்றும் அவர்கள் செல்லும் பாதைக்கு ஏற்ப ஒரு வழிப் பயணத்திற்கு மூன்று ரிங்கிட் தொடங்கி பத்து ரிங்கிட் 50 சென் வரையில் கட்டணம் அதிகரிக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)