மெர்சிங், 16 டிசம்பர் (பெர்னாமா) -- நேற்றிரவு, ஜோகூர் கோத்தா திங்கியிலிருந்து மெர்சிங் நோக்கி செல்லும் 45ஆவது கிலோமீட்டரில், புரோட்டன் பெர்சோனா ரகக் கார், தொயொத்தா வியோஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்த வேளையில் மேலும் இருவர் காயங்களுக்கு ஆளாகினர்.
இரவு மணி 8.30 அளவில் நிகழ்ந்த அவ்விபத்தில், தம்பதியர், முகமட் யூசுப் மோக்தா, ரோஸ்னா சலே மற்றும் அவர்களின் மகன் முகமட் இசுடீன் யூசுப் ஆகியோர் பலியானதாக, மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ட் அப்துல் ரசாக் அப்துல்லா சனி தெரிவித்தார்.
விபத்தில் பலியான அம்மூவருக்கும் தலைவில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
முகமட் யூசுப் மற்றும் ரொஸ்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள வேளையில், மகன் முகமட் இசுடீன், மெர்சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்ததாக அவர் கூறினார்.
குவாந்தானிலிருந்து ஜோகூர் பாருவை நோக்கி, 20 வயதான இளைஞர் ஓட்டிச் சென்ற தொயொத்தா வியோஸ் ரக வாகனம் தடம் புரண்டு, எதிர்திசை பாதையில் நுழைந்தபோது, கோத்தா திங்கியிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த முகமட் இசுடீன் ஓட்டி வந்த புரோட்டன் பெர்சோனாவுடன் மோதி விபத்துக்குள்ளானதாக நம்பப்படுவதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, தொயொத்தா வியோஸ் ரக காரை ஓட்டி வந்த ஆடவருக்கு வயிற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு வலது கை முறிந்ததால் தற்போது ஜோகூர் பாரு சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதோடு, தலையில் காயங்களுக்கு உள்ளாகிய முகமட் இசுடீனின் மகளான அத்தியா நூர் சோபியாவும் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)