பொது

இரு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் இருவர் பலி

26/12/2024 04:14 PM

மஞ்சோங், 26 டிசம்பர் (பெர்னாமா) - இன்று அதிகாலை, பேராக்கின் மஞ்சோங் அருகில் தெற்கு நோக்கிச் செல்லும் டபல்யு.சி.இ நெடுஞ்சாலையின் 212.3ஆவது கிலோமீட்டரில் இரு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் பிள்ளைகள் இருவர் பலியானதோடு நால்வர் காயமடைந்தனர்.

அந்த விபத்தில், 24 வயதுடைய நோர் ஃபடிலா முகமட் அஸ்லான் மற்றும் அவரது இரண்டு வயது மகன் உயிரிழந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ஜே.பி.பி.எம்மின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் தெரிவித்தார்.

பெரொடுவா கெலிஸா ரக காரில் பயணித்த அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், அதே வாகனத்தில் பயணித்த 24 வயதுடைய இளைஞன் மற்றும் மூன்று வயது சிறுவனும் சிராய்ப்பு காயங்களுடன் உயிர் பிழைத்ததாக சபரோட்ஸி நோர் அகமட் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான புரோட்டன் வீரா ரக காரில் பயணித்த இரண்டு ஆடவர்கள் காயங்களோடு உயிர் தப்பினர்.

அதிகாலை 5.15 மணிக்கு அழைப்பு வந்த நிலையில், ஆயர் தாவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு, 22ஆவது கிலோமீட்டர் தொலைவில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக சபரோட்ஸி கூறினார்,

பாதிக்கப்பட்டவர்களைப் பொதுமக்கள் காப்பாற்றிய வேளையில், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செரி மஞ்சோங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)