கோலாலம்பூர், 18 டிசம்பர் (பெர்னாமா) -- குவாந்தனாமோ விரிகுடா தடுப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இரண்டு மலேசியர்களான முஹமட் ஃபரிக் அமினையும் முஹமட் நசிர் லெப்பையும் மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைப்பது குறித்து அமெரிக்க தற்காப்புத் துறை அறிவித்துள்ளது.
போர் சட்டத்தை மீறிய கொலை, வேண்டுமென்றே படுகாயத்தை விளைவித்தது, சதித் திட்டம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உட்பட பல குற்றங்களை அவர்கள் செய்துள்ளனர்.
இராணுவ ஆணையம் முன்னிலையில் அவ்விரு ஆடவர்களும் தங்களின் குற்றங்களையும் ஒப்புக் கொண்டதாக அமெரிக்க தற்காப்பு துறை இன்று தமது அகப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அமெரிக்காவிற்கும் அவ்விரு ஆடவர்களுக்கும் இடையிலான விசாரணைக்கு முந்தைய ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2002-ஆம் ஆண்டில் இந்தோனேசியா, பாலியில் இரவு விடுதி ஒன்றின் மீது அல்-கைடா தாக்குதல் நடத்தியுள்ளனர்.
2003-ஆம் ஆண்டில் இந்தோனேசியா, ஜகர்த்தாவில், JW மேரியட் தங்கும் விடுதி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பில், முதன்மை சந்தேக நபரான என்செப் நூர்ஜமானுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய வாக்குமூலத்தை அளித்ததோடு, அமெரிக்க அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி, 2024-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டதுபோல அவ்விரு ஆடவர்களுக்கும் சுமார் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக அமெரிக்க தற்காப்பு துறை தெரிவித்தது.
அவர்கள், தங்களின் எஞ்சிய சிறைத் தண்டனையை மலேசியாவில் தொடர, இங்கு அனுப்புவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட அவ்விரு ஆடவர்களுக்கும், ஆதரவு சேவை, நலன் மற்றும் சுகாதாரப் பரிசோதனை உள்ளிட்ட விரிவான மறு ஒருங்கிணைப்பு திட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளதாக உள்துறை அமைச்சர், டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
2006-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட அவ்விரு ஆடவர்களையும் மனித உரிமை கொள்கை மற்றும் நீதிக்கான ஆதரவு அடிப்படையில் மலேசிய மடானி ஒருமைப்பாட்டு அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)