பொது

துருக்மெனிஸ்தான் அதிபருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு

19/12/2024 06:34 PM

புத்ராஜெயா, 19 டிசம்பர் (பெர்னாமா) -- மலேசியாவிற்கு இரு நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் துருக்மெனிஸ்தான் பிரதமர் செர்டார் பெர்டிமுஹமெடோவுக்கு இன்று, புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.

2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்ற பின்னர், முதல் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் பெர்டிமுஹமெடோவைக் காலை மணி ஒன்பதுக்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.

அரச மலாய் இராணுவப் படைப் பிரிவின் முதல் பத்தாலியனில் இருந்து 103 உறுப்பினர்களும் மூன்று அதிகாரிகளும் அளித்த மரியாதை அணிவகுப்பைப் பெர்டிமுஹமெடோ பாரவையிட்டார்.

துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன், அமைச்சரவையின் இதர உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதர்கள் உட்பட அரசாங்க உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அன்வாருடன் கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு முன்பதாக பெர்டிமுஹமெடோ வருகையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு ஒத்துழைப்பு, உயர்கல்வி, சுற்றுலா மற்றும் இணைப்பு உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

2025 ஆசியான் மாநாட்டில் மலேசியாவில் தலைமைத்துவம் உட்பட பரஸ்பர நலன் சார்ந்த வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டார் பெர்டிமுஹமெடோவும் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டனர்.

இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதின் முக்கியத்துவம், வட்டார மற்றும் அனைத்துலக பிரச்சனைகளில் இருதரப்பு சார்ந்த புரிந்துணர்வு ஆகிய அச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.

பெட்ரோனாஸுடனான எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்துறையின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், வர்த்தகம், சுற்றுலா தொழில்துறைகள், பகுதி விசா தள்ளுபடி, விமான சேவை மற்றும் வெளிநாட்டு உறவுகள் சம்பந்தப்பட்ட ஏழு ஒப்பந்த ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாறப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)