பொது

கிறிஸ்துமஸ்: டிசம்பர் 23, 24-இல் இலவச டோல் சேவை

21/12/2024 05:06 PM

கோலாலம்பூர், 21 டிசம்பர் (பெர்னாமா) - கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு டிசம்பர் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலை பயனர்களும் டோல் சேவையை இலவசமாக பயன்படுத்தலாம்.

டிசம்பர் 23ஆம் தேதி நள்ளிரவு மணி 12.01இல் இருந்து டிசம்பர் 24ஆம் தேதி இரவு மணி 11.59 வரை இந்த இலவச டோல் சேவை வழங்கப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இந்த இலவச சேவை முதல் வகுப்பு வாகனங்கள் அதாவது தனிப்பட்ட கார்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

நாட்டின் எல்லையில் உள்ள பங்குனான் சுல்தான் இஸ்கண்டார், BSI டோல், ஜோகூரின் தஞ்சொங் குப்பாங் டோல் ஆகியவை இந்த இலவச சேவையில் உட்படுத்தப்படவில்லை என்று டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

'MADANI di Hati, Rakyat Disantuni' என்பதற்கு இணங்க இந்த இலவச சேவையை அளிப்பதற்கு மடானி அரசாங்கம் ஒப்புதல் அளித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த இலவச சேவை மூலம் நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களிடம் வழங்க வேண்டிய சுமார் மூன்று கோடியே 80 லட்சம் ரிங்கிட் செலவை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் நந்தா லிங்கி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)