பொது

ஆசியான் பிரச்சனைகளை விவாதிக்க பிரபோவோ & தக்சினைச் சந்திக்கவுள்ளார் அன்வார்

21/12/2024 06:16 PM

சுபாங் ஜெயா, 21 டிசம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மற்றும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ரா ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 23 மற்றும் 26ஆம் தேதிகளில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் லங்காவியில் சந்திக்கவுள்ளார்.

ஆசியான் வளர்ச்சி உட்பட வட்டாரத்தில் எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்தச் சந்திப்பை நடத்தவிருப்பதாக அன்வார் தெரிவித்திருக்கின்றார்.

''அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடனான இரு தரப்பு சந்திப்பு வரும் 23ஆம் தேதி லங்காவியில் நடைபெறும்,'' என்றார் அவர்.

பிரபோவோ உடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்தும் ஆசியானின் உறுப்பு நாடாக இந்தோனேசியாவின் முக்கிய பங்கு குறித்தும் விவாதிக்கப்படும் என்று அன்வார் தெரிவித்தார்.

இதனிடையே, தக்சின் ஷினாவத்ரா உடனான சந்தித்து குறித்து பேசிய பிரதமர், பல்வேறு வட்டார பிரச்சனைகள் மற்றும் சவால்களை தீர்வுக் காண்பதற்கான அணுகுமுறைகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

''ஏனென்றால், சில ஆசியான் தலைவர்களுடனான அவரது உறவு மற்றும் அனுபவம் வலுவாக உள்ளது,'' என்று பிரதமர் கூறினார்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி, ஆசியான் தலைவாராக மலேசியா அதிகாரபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)