பொது

ஆசிரியை இஸ்திகோமா கொலை வழக்கு விசாரணை ஜனவரி 23-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டது

23/12/2024 06:09 PM

அலோர் காஜா, 23 டிசம்பர் (பெர்னாமா) -- கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஆசிரியை இஸ்திகோமா அஹ்மட் ரோசியைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் முன்னாள் ஆசிரியர் ஒருவரின் வழக்கு விசாரணையை, அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதிக்கு நிர்ணயித்தது.

அக்கொடூர கொலை தொடர்பான மரபணு பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளைத் தங்கள் தரப்பு பெற்றுவிட்டதாக, வழக்கு விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நூர் ஹிடாயு அப்துல் லத்திப் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷு யீ அத்தேதியை நிர்ணயித்தார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. வீரனேஷிடமிருந்து பெற்ற ஆலோசனையைத் தொடர்ந்து, நீதிமன்றம் அத்தேதியை நிர்ணயித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் முன்னாள் ஆசிரியர் ஒருவர் இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

தியோ முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அதனைப் புரிந்துக் கொண்டதாக 36 வயதான முஹமட் ஃபட்ஸ்லி அரிஃபாட்சிலா தலையசைத்தார்.

எனினும், இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளதால் அந்நபரிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மலாக்கா, பூலாவ் செபாங், கம்போங் தஞ்சோங் ரீமாவ் லுவார் சாலை அருகே, 33 வயதான இஸ்திகோமாவைக் கொலை செய்ததாக, முஹமட் ஃபட்ஸ்லி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாத 40 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை மற்றும் 12-க்கும் குறையாத பிரம்படி விதிக்கப்படலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)