பொது

இணையம் வழி பாலியல் குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 13 ஆடவர்கள் கைது

24/12/2024 04:35 PM

கோலாலம்பூர், 24 டிசம்பர் (பெர்னாமா) - சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான உள்ளடக்கம், சி.எஸ்.எ.எமை உட்படுத்தி இணையம் வழியாக பாலியல் குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 13 ஆடவர்களை அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் கைது செய்துள்ளது.

நேற்று, ஆறு மாநிலங்களில், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சியுடன் இணைந்து போலீசார் மேற்கொண்ட ஒருங்கிணைந்த ஓ.பி பேடோ நடவடிக்கையின்போது 40 ஆயிரம் சி.எஸ்.எ.எம் மற்றும் ஆபாச காணொளிகளையும் கண்டெடுத்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, பேராக், ஜோகூர் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்ட அச்சந்தேக நபர்கள் அனைவரும், 20 முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் டான் ஸ்ரீ ரஸாருடின் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையில், பாலியல், பெண்கள், சிறார்கள் புலனாய்வுப் பிரிவு, D11, தொழில்நுட்ப உதவிப் பிரிவு, D6 மற்றும் புக்கிட் ஆமான் போலீஸ் தடயவியல் ஆய்வகம், D10 மற்றும் எம்.சி.எம்.சி அதிகாரிகளை உட்படுத்திய 18 குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் 7 கணினிகள், 11 தொலைப்பேசிகள், 9 திசைவிகள், 7 இணக்கிகள் மற்றும் தலா ஒரு மடிக்கணினி, ஒரு டிவிடி மற்றும் வந்தட்டு ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

13 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு, 2017ஆம் ஆண்டு சிறார்கள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம், செக்‌ஷன் 10ன் மற்றும் ஆபாச உள்ளடக்கங்களை வைத்திருந்ததற்காக குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 292 கீழ், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)