பொது

2024 மலேசிய அரசியல் ஒரு கண்ணோட்டம்

28/12/2024 07:00 PM

கோலாலம்பூர், 28 டிசம்பர் (பெர்னாமா) -- ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு ஆட்சியின் கீழ், அரசியல் நிலைத்தன்மை கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டில் அந்த அரசாங்கத்திற்கான ஆதரவு அதிகரித்து, சீராகவே இருந்ததைக் காண முடிந்தது.

கடந்தாண்டில் ஆறு மாநிலங்களுக்கான தேர்தல்களும், ஆறு இடைத்தேர்தல்களும் நடைபெற்ற வேளையில், இவ்வாண்டில் நான்கு இடைத்தேர்தல்கள் மட்டுமே நடைபெற்றன.

அதைத் தவிர்த்து, அரசியல் கட்சிகளைப் பொருத்த வரையில் பெரும்பாலான கட்சிகளின் தலைமைத்துவத்திலும் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதுமில்லாமலேயே இவ்வாண்டு மலேசிய அரசியல் நீடித்தது.

இவ்வாண்டு கோலா குபு பாரு, சுங்கை பாக்காப், நெங்கிரி, மஹ்கோதா ஆகிய நான்கு சட்டமன்றங்களில் மூன்று சட்டமன்றத் இடைத் தேர்தல்கள் அதன் உறுப்பினர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வேளையில், மேலும் ஒன்றில், அதன் உறுப்பினர் கட்சியில் உறுப்பியம் இழந்ததைத் தொடர்ந்து நடைபெற்றது.

கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங், புற்றுநோயால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மே 11-ஆம் தேதி நடத்தப்பட்ட முதலாவது இடைத்தேர்தலில், நம்பிக்கைக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறையின் முன்னாள் பத்திரிக்கைச் செயலாளர் பாங் சேக் தாவ் 3,869 வாக்குகள் பெறும்பாண்மையில் வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து, சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினரான நோர் சம்பி லத்திப் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஜூலை 6-ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டாவது இடைத்தேர்தலில், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட அபிடின் இஸ்மாயில் 4,267 வாக்குகள் பெறும்பாண்மையில் வெற்றி பெற்றார்.

நெங்கிரி சட்டமன்றத்தில், 2023-ஆம் ஆண்டில் கிளந்தானின் 15-ஆவது மாநிலத் தேர்தலில் பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முஹமட் அசிஸ் அபு நயிம், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்ததால், அவரின் உறுப்பியத்தை கடந்த ஜூன் 13-ஆம் தேதி பெர்சத்து கட்சி நீக்கியதைத் தொடர்ந்து,கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி அச்சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் தேசிய முன்னணியைச் சேர்ந்த முஹமட் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி 3,352 வாக்குகள் பெறும்பாண்மையில் வெற்றி பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி, குளுவாங்கில் உள்ள இன்சே' பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் மஹ்கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஷரிஃபா சைட் சைன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 28-ஆம் தேதி அங்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து போட்டியிட்ட சைட் ஹுசேன் சைட் அப்துல்லா 20, 648 வாக்குகள் பெறும்பாண்மையில் வெற்றி பெற்றார்.

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஆறு மக்களவை உறுப்பினர்கள் மடானி அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தது இவ்வாண்டு நாட்டில் கவனத்தை ஈர்த்த மட்டுமின்றி, இடைத் தேர்தல் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் விவகாரங்களில் ஒன்றாகும்.

எனினும், கூட்டரசு அரசியலமைப்பின், சட்டவிதி 49A(1)-இன் கீழ், புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைட் அபு ஹுசேன் ஹபிஸ் சைட் அப்துல் ஃபசால், குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் அசிசி அபு நயிம், ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் சஹாரி கெசிக், கோலா கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்கண்டார் சுல்கர்னைன் அப்துல் காலிட், லபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுஹாய்லி அப்துல் ரஹ்மான், தஞ்சோங் காரங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுல்கஃபேரி ஹனந்பி ஆகியோரை உட்படுத்திய தொகுதிகள் காலியாகாது என்று மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.

ஜனநாயக செயல்முறை கட்சி, ஜ.செ.க-வின் மாநில மற்றும் இளைஞர் பிரிவுக்கான தேர்தலும், ம.இ.கா, சபா மக்கள் கூட்டணி கட்சி, PBRS மற்றும் பெர்சத்து ஆகிய அரசியல் கட்சிகளின் புதிய தலைமைத்துவத்திற்கான தேர்தலும் இவ்வாண்டில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

ஜ.செ.க கட்சியின் மாநிலத் தேர்தலைப் பொருத்தவரையில், நெகிரி செம்பிலானில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தமது தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஜ.செ.க தலைவராக ஜோகூரில் தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங், பினாங்கில், மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் டான் கோக் வை, பேராக்கில் வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தோல்வி கண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய வேளையில், அம்மாநிலத்தின் ஜ.செ.க தலைவராக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ங் ஸ்சே ஹான் வெற்றி பெற்றார்.

ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற கட்சி தேர்தலில், 2024-இல் இருந்து 2027-ஆம் ஆண்டு வரைக்குமான ம.இ.கா கட்சியின் தலைவர் பதவியை டான் ஶ்ரீ எஸ். ஏ விக்னேஸ்வரனும் துணைத் தலைவர் பதவியை டத்தோ ஶ்ரீ எம். சரவணனும் போட்டியின்றி வென்று தற்காத்துக் கொண்டனர்.

பெர்சத்து கட்சியைப் பொருத்தவரையில், டான் ஶ்ரீ முகிடின் யாசின் கட்சியின் தலைவராக நீடிக்கும் வேளையில், போட்டியின்றி வெற்றி பெற்ற முன்னாள் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாட்டில் சில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக , இம்மாதம் 15-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த கெஅடிலான் கட்சியின் மாநாட்டை ஒத்தி வைத்த அக்கட்சி முடிவெடுத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)