பொது

2024ஆம் ஆண்டு மலேசியப் பொருளாதாரம் ஒரு கண்ணோட்டம்

28/12/2024 04:53 PM

கோலாலம்பூர், 28 டிசம்பர் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் கீழ், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த 2024-ஆம் ஆண்டு முழுவதிலும் பல்வேறு முயற்சிகளும் பொருளாதாரக் கொள்கைகளும் அமல்படுத்தப்பட்டன.

இவ்வாண்டு ஜனவரி 2-ஆம் தேதி அரசாங்கம் 'PADU' எனப்படும் முதன்மை தரவு தளத்தை அறிமுகப்படுத்தியது.

தகுதியுள்ளவர்கள் அரசாங்க வசதிகளைப் பெறுவதை உறுதிசெய்ய, நாட்டின் இலக்கவியல் உருமாற்ற அணுகுமுறைக்கு ஏற்ப 'PADU' அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில், JS-SEZ எனப்படும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.

அரசாங்கம் நிதி அமைச்சின் வழி, 'SARA' எனப்படும் அடிப்படை உதவித் தொகையை கடந்தாண்டு வழங்கப்பட்ட 600 ரிங்கிட்டைக் காட்டிலும் இவ்வாண்டும் 1,200 ரிங்கிட்டாக உயர்த்தியது.

திருமணமாகாதவர்களுக்கான உதவித் தொகை 600 ரிங்கிட்டாக நிலைநிறுத்தப்பட்டது.

கடந்த பிப்ரவரி முதலாம் தேதி அரசாங்கம் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் வழி 'My Subsidi' டீசல் திட்டத்தையும் ஃப்ளீட் அட்டை அமலாக்கத்தையும் அறிமுகப்படுத்தியது.

Fஃப்ளீட் அட்டை பயன்பாடு, உதவித் தொகைக்கு உட்படுத்தப்பட்ட டீசல் எண்ணெய் மோசடி மற்றும் கடத்தலைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

அதேவேளையில், வரும் நான்கு ஆண்டுகளுக்கு மலேசியாவில், ஒரு கோடியே ஐந்து லட்சம் ரிங்கிட் மதிப்புடைய கூடுதல் முதலீட்டை மைக்ரோசாஃப்ட் அறிவித்தது.

மலேசியாவைத் தளமாகக் கொண்ட பிறகு அந்நிறுவனம் 32 ஆண்டுகளில் செய்த மிகப்பெரிய முதலீடு இதுவாகும்.

சந்தை விலைப்படி, டீசல் சில்லறை விலையை உட்படுத்தி டீசலுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகையை இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கடந்த ஜூன் 9-ஆம் தேதி அறிவித்தார்.

பொது சேவை துறை ஊழியர்களுக்கு 15 விழுக்காட்டு ஊதிய உயர்வை பிரதமர் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி அறிவித்தார்.

நாட்டின் வரலாற்றில், உயர்ந்த மற்றும் சிறந்ததாகக் கருதப்படும் இந்த ஊதிய உயர்வு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது.

நாட்டின் வரலாற்றில் மிக அதிகமான தொகையிலான அதாவது 42,100 கோடி ரிங்கிட் மதிப்பிலான 2025 வரவு செலவுத் திட்டத்தை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி தாக்கல் செய்தார்.

அதில், 33, 500 கோடி ரிங்கிட் நிர்வகிப்பு செலவிற்கும், எண்ணாயிரத்து 600 கோடி ரிங்கிட் மேம்பாட்டு செலவிற்கும், 200 கோடி ரிங்கிட் எதிர்பாரா செலவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி, நாட்டின் முதலாவது மின்னியல் வாகனமான புரோட்டோன் e.MAS 7-ஐ தேசிய கார் உற்பத்தி நிறுவனமான புரோட்டோன் அறிமுகப்படுத்தியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)