சிறப்புச் செய்தி

மிதமான வளர்ச்சியில் இவ்வாண்டு கலைப் பயணம்

29/12/2024 05:16 PM

கோலாலம்பூர், 29 டிசம்பர் (பெர்னாமா) - 2024-ஆம் ஆண்டு மலேசிய கலைத்துறைக்கு மிதமான வளர்ச்சி நிறைந்த ஆண்டாக விளங்கியதுடன் கலையை வளர்க்கவும் கலைஞர்களை ஊக்குவிக்கவும் உலகளவில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

அவற்றில், அனைவரையும் கவர்ந்த பிரமாண்டமும் குதூகலமும் நிறைந்திருந்த திரைப்படங்களின் வெளியீடு மற்றும் இசை நிகழ்ச்சிகளின் ஏற்பாடு ஆகியவை அடங்கும். 

மற்றொரு புறம் கலைத்துறையைச் சேர்ந்த சிலரின் திடீர் இழப்பும் இவ்வாண்டில் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதன் தொடர்பான ஒரு தொகுப்பைத் தொடர்ந்து காண்போம்...

நாட்டில் திரையீடு கண்டு, இரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருந்த சில படைப்புகளில் 'CURRY MEE' திரைப்படமும் ஒன்றாகும்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பன்முகங்களைக் கொண்டிருக்கும் அப்பளம் படப் புகழ் கானா பிரகாசம், மலேசிய வாழ்வியல் சூழலைப் பிரதிபலிக்கும் கதை களங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடிப்பதில் புகழ் பெற்றவர்.

அந்த வகையில், GV Media Broadcast நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த 'CURRY MEE' திரைப்படத்தில் மலாய், சீனர் மற்றும் இந்தியர் என்று மூவினத்தையும் ஒரு குடையின் கீழ் சித்தரித்துக் காட்டினார்.

இவ்வாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி உள்ளூர் திரையரங்குகள் மட்டுமின்றி சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 40 திரையரங்குகளில் வெளியீடு கண்ட இத்திரைப்படத்தில் பல திரைப் பிரபலங்கள் நடித்திருந்தனர்.

=====FLASH=====

திரைத் துறையில் ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றி பல தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் சினிமா பாடல்களைத் தாண்டி தமது படைப்புகளின் வழி தமிழ் இலக்கிய உலகிற்குச் சேவையாற்றி வருவதில் கவிஞர் வைரமுத்து வல்லவர்.

'மகா கவிதை' எனும் புதிய நூலினை இயற்றி தமிழ் இலக்கிய உலகிற்கு மீண்டும் தொண்டாற்றி இருக்கும் அவரைப் பாராட்டும் விதமாக கடந்த மார்ச் 8ஆம் தேதி மலேசியாவில் அவருக்கு 'பெருந்தமிழ்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

=====FLASH=====

பாரம்பரிய இசைகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் வகையில் கோலாலம்பூரில் 'வேணுநாதம்' எனும் தமிழ் பாரம்பரிய இசை நிகழ்ச்சி ஒன்று கடந்த மார்ச் 15ஆம் தேதி ஏற்பாடு செயப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் முதல் நாளான மார்ச் 14-ஆம் தேதி மாணவர்களுக்கும் இசை விரும்பிகளுக்கும் இசை பட்டறைகள் நடத்தப்பட்டிருந்தன. 

இந்திய பாரம்பரிய இசைகள் மீது புரிதல் ஏற்படுவதோடு மட்டுமின்றி, அது குறித்த விழிப்புணர்வை வெளிக்கொணரும் நோக்கிலும் இந்தப் பட்டறைகள் நடத்தப்பட்டன.

=====FLASH=====

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பிற்குப் பின்னர் அத்திரைப்படம் குறித்து மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் இவ்வாண்டில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி, அத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியீடு கண்டது.

=====FLASH=====

32 ஆண்டுகாலம் உலகெங்கும் உள்ளவர்களை தமது இசையால் கட்டிப்போட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி  கடந்த ஜூலை 27ஆம் தேதி மீண்டும் மலேசியாவில் சிறப்பாக நடைபெற்றது.

இசைப்புயலாக உருவெடுத்து, இந்திய சினிமாவின் உச்சம் தொட்ட அவர், தமது இசைகுழுவுடன் இணைந்து உலக அளவில் பல்வேறு நாடுகளில் மேடை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றார். 

இந்த இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, முன்னதாக ஜூலை 8ஆம் தேதி திங்கட்கிழமை, ஏ.ஆர்.ரஹ்மான் மலேசிய ரசிகர்களைச் சந்தித்தார்.

=====FLASH=====

மக்களின், குறிப்பாக நடிகர் விஜய் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தது THE GREATEST OF ALL TIME, GOAT திரைப்படம்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜயின் 68-ஆவது திரைப்படமாக, கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியீடு கண்டது.

விரைவில் அரசியலில் களமிறங்கவிருக்கும் விஜய்க்கு, இப்படம் கடைசிக்கு முந்தைய படமாக இருப்பதால், வழக்கத்திற்கு மாறாக ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன.

====FLASH====

இவ்வாண்டு மலேசியா திரைத்துறைக்கு மற்றொரு மைல்கல்லாக அமைந்தது இயக்குநர் கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் வெளிவந்து, திரையரங்குகளில் வசூல் சாதனைப் படைத்த C 4 CINTA  திரைப்படம்.

பல்வேறு காதல் கதைகளை அதன் கதாப்பாத்திரங்கள் வழியாக மிளிரச் செய்து பலரின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய கார்த்திக் ஷாமளனின்  இப்படைப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

====FLASH====

இந்த மகிழ்ச்சிக்கு மத்தியில், இவ்வாண்டு கலைத்துறை பல கலைஞர்களின் இழப்பையும் சந்தித்துள்ளது.

அதில், இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு நூற்றுக் கணக்கான பாடல்களைப் பாடி தனித்து மிளிர்ந்த பாடகி உமா ரமணன் இவ்வாண்டு மே ஐந்தாம் தேதியும்
பத்மஶ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய அங்கீகாரங்களைப் பெற்று உலகளவில் புகழ்ப்பெற்றவரான பிரபல தபேலா இசைக்கலைஞர் மேஸ்ட்ரோ ஸாக்கிர் ஹுசேன் டிசம்பர் 15ஆம் தேதியும் உயிரிழந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து, குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என்று, தமிழ்த் திரையுலகில் இரண்டு தலைமுறைக்கும் மேலாக பல கதாப்பாத்திரங்களில் மிளிர்ந்து வந்த மூத்த நடிகர் டெல்லி கணேஷ் நவம்பர் 9ஆம் தேதியும்....

வில்லன் கதாபாத்திரத்திற்கு தனி அடையாளம் கொடுத்து தமது பார்வையால் மிரட்டிய  நடிகர் டேனியல் பாலாஜி மார்ச் 29ஆம் தேதியும் மரணமடைந்தனர்.

அதோடு, ஒரு நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக மலேசிய கலைத் துறையில் தடம் பதித்த மூத்த கலைஞரான க.விஜயசிங்கம் ஜூன் 12ஆம் தேதி காலமானார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)