பிரிக்பில்ட்ஸ், 31 டிசம்பர் (பெர்னாமா) - ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு உண்டு.
அதுபோல், ஒவ்வொரு முடிவிலும் புதிய தொடக்கம் ஒன்று காத்திருக்கும்.
அந்த வகையில் ஓராண்டாக நம்மைச் சோதித்த பல சவால்களைச் சந்தித்து சாதித்து இன்று 2024ஆம் ஆண்டின் விளிம்பில் இருக்கின்றோம்.
கடந்து வந்த 2024ஆம் ஆண்டின் அனுபவங்களைப் பிரமிப்பாய் நினைவுகூறும் அதே தருணத்தில் இவ்வாண்டிற்கு மகிழ்ச்சியாய் நன்றிகூறி விடைகொடுத்து புது ஆண்டை வரவேற்குக் காத்திருக்கும் பொது மக்களிடம் பெர்னாமா செய்திகள் மேற்கொண்ட கண்ணோட்டத்துடன் நமது நிருபர் கேசவாணி ஐயனார்.
ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் புதிய இலக்குகள் மற்றும் கனவுகளை அடையும் நம்பிக்கையுடன் தீர்மானங்களை உருவாக்குவது வழக்கம்.
இருப்பினும், ஆண்டு தொடங்கியப் பின்னர், மாதங்கள் நகர நகர வாழ்க்கையில் பல எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்றத் தாழ்வுகளையும் சந்திக்க நேர்கிறது.
எது நேர்ந்த போதிலும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் இறுகப்பற்றிக் கொண்டு, தளராத மனதோடு ஒவ்வோர் ஆண்டையும் கடந்து செல்வதாகக் கூறுகின்றனர் சிலர்.
மேலும், 2024ஆம் ஆண்டில் இனிப்பான மற்றும் கசப்பான தங்களின் அனுபவங்களையும் அவர்கள் பெர்னாமா செய்திகளிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்த வருடம் தங்கள் இலக்குகளை நோக்கிய பயணம் சிறப்பாக அமைந்ததோடு, தொடர்ந்து பல கனவுகளை அடைய விரும்புவதாக , வர்மன், சுபத்ரா ஆகியோர் தங்களின் இனிப்பான அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
இதனிடையே, இந்த வருடம் தங்களுக்குச் சவால் நிறைந்த ஆண்டாகவும், பல இன்னல்களைக் கடக்க நேரிட்டதாகவும் பவானி , சாரா ஆண்ட்ரியானா ஆகியோர் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தனர்.
ஆண்டு நிறைவடையும் இந்தத் தருணத்தில் கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கும்போது பல விதமான அனுபவங்கள் மனதில் நிழலாடும்.
இவ்வாண்டுக்கான அந்த நினைவுகளைச் சேகரித்து கொண்டு, அடுத்து வரும் ஆண்டை மற்றொரு தீர்மானம், இலக்கு என்று எதிர்கொள்ளவும் தயாராகி விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)