பொது

சமூக ஊடக உரிமக் கொள்கை; சிறுவர்களிடையே இணைய அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கான முன்னெடுப்பு

30/12/2024 08:24 PM

கோலாலம்பூர், 30 டிசம்பர் (பெர்னாமா) -- சிறுவர்கள் எதிர்நோக்கும் இணைய அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக, வரும் ஜனவரி முதலாம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருக்கும் மலேசியாவின் சமூக ஊடக உரிமக் கொள்கை அமையவுள்ளது.

இந்தக் கொள்கை, பாதுகாப்பான இலக்கவியல் சூழலை உருவாக்குவதோடு, சிறார் பாலியல் துன்புறுத்தல் அம்சங்கள்,சி எஸ்.ஏ.எம் போன்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்கு சமூக ஊடகத் தளங்கள் பொறுப்பேற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெயர் குறிப்பிடாத நபர்களுக்கு சமூக ஊடக சேவை மற்றும் அணுகலை வழங்குவதால், குற்றவாளிகள், குழந்தைகளை எளிதாக அணுகவோ அல்லது பாலியல் துன்புறுத்தல் அம்சங்கள் கொண்ட உள்ளடக்கத்தை பதிவு செய்யவோ வழிவகுக்கிறது.

இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதை, அரச மலேசிய போலீஸ் படையின் இணையக் குற்றங்கள் மற்றும் கடத்தல் பிரிவின் புள்ளி விவரங்கள் காட்டுவதோடு, அதன் தொடர்பான கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான உடனடி தேவையையும் அது வலியுறுத்துகிறது.

ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படும் உரிமக் கட்டமைப்பு, பொறுப்புணர்வுக்கான ஒரு கருவி மட்டுமல்லாது, சிறுவர்கள் எதிர்நோக்கும் இணையக் குற்றங்களைக் கையாள்வதில் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கையும் ஆகும் என்று வட மலேசியப் பல்கலைக்கழகம்,யு.யு.எம்-இன் பல்லூடக தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு பிரிவின் மூத்த விரிவுரையாளர், டாக்டர் அசியான் முஹமட் அட்ஸ்மி தெரிவித்தார்.

''உரிம கட்டமைப்பு, வலைத்தள அளவில் பொறுப்புணர்வைக் காட்டுகிறது. இலக்கவியல் கல்வியறிவு திறன்களைக் கொண்ட மக்களை மேம்படுத்துவது முக்கியமானது. மக்களின் இலக்கவியல் கல்வியறிவு குறித்து பேசும்போது, ​​​​அதாவது பொது விழிப்புணர்வு பிரச்சாரம், கல்வி கழகங்களுடனான பங்காளித்துவம் மற்றும் மோசடிகளை அடையாளம் காண்பது பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கு அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துவது போன்றவை வலியுறுத்தப்பட வேண்டும்,'' என்றார் அவர்.

மலேசியாவின் உரிம முயற்சி, அனைத்துலக சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதை டாக்டர் அசியான் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

இணைய அச்சுறுத்தல்களைக் கையாள, மலேசியாவில் வியூக இலக்கவியல் கல்வியறிவை ஒருங்கிணைப்பது மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இணைய அச்சுறுத்தல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, அது தொடர்பாக மக்களுக்கு ஆரம்பக் கல்வி, பெற்றோர்களுக்குப் பயிற்சி மற்றும் அணுகக்கூடிய புகாரளிக்கும் தளங்கள் போன்றவை அவசியமாகும்.

இதனிடையே, சிறார்கள் எதிர்நோக்கும் இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அதன் தொடர்பான தளங்களை கண்காணிப்பதும் அவசியம் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நிபுணரும், புல துணை முதன்மையருமான டாக்டர் ஹஸ்ரீனா பேகம் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.

''மிக முக்கியமானது பாலியல் கல்வி என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அதைச் சுற்றி நிறைய தடைகள் உள்ளன. பாலியல் கல்வியில், தெரியாதவர்கள், ஆபத்தானவர்கள் போன்றோருடன் எங்கும் செல்ல வேண்டாம் என்று நாங்கள் சிறுவர்களுக்கு எப்போதும் தெரிவிப்போம். அதோடு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும் தெரிவிப்போம். ஆனால், இணையத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எச்சரித்து இருப்பார்கள் என்று கூறமுடியாது. எனவே, இன்னும் அதிகமான சிறுவர்கள் உள்ளனர். பெற்றோர்கள் இன்னும் தங்களின் பிள்ளைகளுக்கு நினைவுறுத்தவோ அல்லது சிறுவர்களுக்கு பாலியல் குற்றங்கள் குறித்தக் கல்வியையோ வழங்கவில்லை என்று நான் நினைக்கிறேன். உணர்ச்சி ரீதியான தொடர்பை இணையத்தில் மேற்கொள்ளலாம்,'' என்று அவர் மேலும் கூறினார்/

குழந்தைகளைக் கையாளுவதற்கு இணையக் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது போன்று, வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களைத் தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட தளங்களே பொறுப்பு என்பதை இந்த உரிமக் கொள்கை உறுதிசெய்கிறது.

மலேசியாவில் குறைந்தபட்சம் 80 லட்சம் சமூக வலைத்தள மற்றும் இணையத் தகவல் சேவையைப் பயன்படுத்துபவர்களை பயனீட்டாளர்களாக கொண்டிருக்கும் சமூக வலைத்தளங்கள், 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், சட்டம் 588-இன் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி, உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை 27ஆம் தேதி தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி அறிவித்திருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)