உலகம்

தென் கொரிய விமான விபத்து ; 174 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

31/12/2024 05:57 PM

தென் கொரியா, 31 டிசம்பர் (பெர்னாமா) - தென் கொரிய விமான விபத்தில் பலியான 179 பேரில் 174 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் பார்க் சாங்-வூ தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களால் மேலும் ஐவர் அடையாளம் காணப்படவில்லை என்று அவர் கூறினார்.

அந்த ஐவர் முடிந்தவரை விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என்று பார்க் உறுதியளித்துள்ளார்.

இவ்விபத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தென் கொரிய விமான நிறுவனங்களின் நிர்வகிப்பில் உள்ள அனைத்து போயிங் 737-800 விமானங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த விமான விபத்தைத் தொடர்ந்து விமானப் பாதுகாப்பு குறித்த ஏற்பட்டிருக்கும் அச்சத்தினால் தென் கொரியாவில் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்வது அதிகரித்துள்ளது.

நேற்றுவரை உள்நாடு மற்றும் அனைத்துலக விமானப் பயணங்களுக்கான 68,000 டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)