பொது

ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்குத் தடுப்பு காவல்

04/01/2025 05:10 PM

புத்ராஜெயா, 04 ஜனவரி (பெர்னாமா) - கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம், புஸ்பாகோம்மில் கனரக வாகனங்களுக்கான பரிசோதனை தொடர்பிலான ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம், இன்று காலை தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எஸ்.பி.ஆர்.எம் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரையில் தடுப்புக் காவவில் வைக்க மாஜிஸ்திரேட் ஜோன் டான் சின் யிங் அனுமதியளித்தார்.

முன்னதாக, காலை மணி பத்து அளவில் 40 வயதான அச்சந்தேக நபரை எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

சாலை போக்குவரத்துத் துறை, ஜே.பி.ஜே உடனான வியூக ஒத்துழைப்பின் வழி, அச்சந்தேக நபரை நேற்று பிற்பகலில் கைது செய்யப்பட்டதாக, எஸ்.பி.ஆர்.எம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

அதன் பின்னர், நேற்று மதியம் அந்நபர், எஸ்.பி.ஆர்.எமிடம் ஒப்படைக்கப்படைக்கப்பட்டார்.

புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவுடன் அவர் கைது செய்யப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் கூறியது.

வாகனப் பரிசோதனைக்கு ஒப்புதல் அளிப்பதற்காக புஸ்பாகோம்மில் சோதனையிடப்பட்ட ஒவ்வோர் வாகனத்திற்கும் நூற்றுக்கணக்கான ரிங்கிட் தொகையை அந்நபர் செலுத்தியதாக முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 16 உட்பிரிவு (பி)(ஏ)-வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)