ஜாலான் தெக்பி, 16 ஜனவரி (பெர்னாமா) -- இவ்வாண்டு மலேசியா ஏற்றிருக்கும் ஆசியான் தலைமைத்துவத்தை வெற்றியடையச் செய்வதற்கான முயற்சிகளில், மூன்று விவகாரங்களில் தற்காப்பு அமைச்சு கவனம் செலுத்தும்.
வட்டார மோதல்களுக்கு வழிவகுக்கும் பதற்றம் அல்லது முரண்பாடு அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதே, அதன் முதன்மை கவனம் என்று தற்காப்பு அமைச்சர், டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
இவ்வாண்டு நவம்பர் 17 முதல் 21-ஆம் தேதி வரையில் நடைபெறும் ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம், எடிஎம்எம் மற்றும் எடிஎம்எம் ப்ளாஸ் வழியாக எந்தவொரு வட்டார சவால்களையும் நிர்வகிப்பதில் ஆசியான் சிறந்த அரசதந்திர தளமாக உயர்த்தப்படுவதை உறுதி செய்வது இரண்டாவதாக கவனம் செலுத்தப்படும் என்றும் முஹமட் காலிட் கூறினார்.
''உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள் மற்றும் ஆசியானின் பிற வியூக பங்காளிகளுடன் வட்டாரத்தில் பல்வேறு பயிற்சிகள், ஒத்துழைப்புகள் மற்றும் தற்காப்பு அரசதந்திரத்தை நெறிப்படுத்த ஆசியானை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவோம், '' என்றார் அவர்.
அதுமட்டுமின்றி, அனைத்துலக பாதுகாப்பு அம்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அனைத்துலக அமைப்புகளின் கீழ் அமைதி காக்கும் பணிகளிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மலேசியாவின் ஈடுபாடு தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)