கோலாலம்பூர், 20 ஜனவரி (பெர்னாமா) -- அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ஜேபிபிஎமைச் சேர்ந்த 12,000 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நாடு முழுவதும் பணிக்கு அமர்த்தப்படுவர்.
எந்தவொரு சம்பவத்தையும் சமாளிக்க தீயணைப்பு துறையில் போதுமான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக, விடுமுறை முடக்கம் மற்றும் சுழற்சி முறை அலம்படுத்தப்படுவதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை, கேபிகேதி அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
''எங்களிடம் ஏறக்குறைய 15,000 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 70 விழுக்காடு விடுப்பு முடக்கப்பட்டுள்ளது. எனவே சுமார் 10,000 முதல் 12,000 பேர் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளனர், '' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் 2025 சீனப் புத்தாண்டு தயார்நிலை திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர், ஙா அவ்வாறு கூறினார்.
இக்காலகட்டம் முழுவதும் அவசரநிலை சம்பவங்களை எதிர்கொள்ளும் பொருட்டு, ஜேபிபிஎம் மூலம் தமது அமைச்சு ஐந்து முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
கல்வி, அமலாக்கம், தடுப்பு, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்களைக் குறைப்பதற்கான வியூக ஒத்துழைப்பு ஆகியவையே அந்த ஐந்து அம்சங்கள் ஆகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)