கிள்ளான், 21 ஜனவரி (பெர்னாமா) -- கனரக வாகனங்கள், குறிப்பாக அதிக சுமைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான டோல் கட்டணத்தை உயர்த்தும் கொள்கையை இயற்றும் சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்று டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
அனுமதிக்கப்பட்ட சுமை வரம்பிற்கு கனரக வாகனங்கள் இணங்குவதை உறுதி செய்வதற்கும் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளின் தரத்தை உறுதி செய்வதற்கும் இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கினார்.
''சுமை வரம்பை லாரிகள் மீறக்கூடாது என்பதற்காக எதிர்காலத்தில் ஒரு கொள்கை இருக்கும். அதுதான் சாலையைச் சேதப்படுத்துகின்றன. அவற்றுக்கு அபராதம் விதிக்கவோ அல்லது அதிக டோல் கட்டணம் வசூலிக்கவோ ஒரு வழிமுறையை நாம் கண்டறியலாம்,'' என்றார் அவர்.
கனரக வாகனங்கள், குறிப்பாக லாரிகளின் சுமையைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் இருந்தாலும், இது தொடர்பான கொள்கையை வகுப்பதில் அனைத்து பங்குதாரர்களுடனும் அமைச்சு ஒத்துழைக்கும் என்று அவர் கூறினார்.
மற்றுமொரு நிலவரத்தில், இன்று நள்ளிரவு தொடங்கி, WCE எனும் மேற்கு கடற்கரை விரைவுச்சாலையின், பிரிவு இரண்டு திறக்கப்படுவதைத் தொடர்ந்து, அதன் நெடுஞ்சாலை பயனர்கள் ஒரு மாத காலத்திற்கு இலவசமாக டோல் சேவையைப் பயன்படுத்தலாம் என்று டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
''ஷா ஆலம் விரைவுச்சாலை எஸ்எஇ டோல் சாவடியிலிருந்து எஸ்கேவிஇ அடுக்கு நெடுஞ்சாலை வரை இரு திசைகளிலும் இன்று நள்ளிரவு தொடங்கி ஒரு மாத காலத்திற்கு டோல் கட்டணம் இலவசம், '' என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர் கிள்ளானில் டபிள்யூ.சி.இ பிரிவு இரண்டு நெடுஞ்சாலையைத் திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)