விளையாட்டு

11-வது முறை மலேசிய சூப்பர் லீக்கை கைப்பற்றும் இலக்கை நெருங்கியது ஜே.டி.தி

26/01/2025 05:40 PM

கோலா நெருஸ், 26 ஜனவரி (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை தொடர்ந்து 11-வது முறையாக கைப்பற்றும் இலக்கை ஜோகூரின், ஜே.டி.தி நெருங்கியுள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் திரெங்கானு எஃப்.சி-ஐ 1-0 என்ற கோலில் ஜே.டி.தி தோற்கடித்தது.

திரெங்கானுவின், கோலா நெருஸ் அரங்கில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

சொந்த அரங்கில் விளையாடிய திரெங்கானு எஃப்.சி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட வேளையில் அதனை முறியடித்து ஜே.டி.தி ஒரு கோலோடு தனது வெற்றியை உறுதி செய்தது.

ஜே.டி.தி-இன் ஒரே கோல் ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் அதன் புகழ்பெற்ற இறக்குமதி ஆட்டக்காரரான ஸ்பெய்னின் யுவான் முனிஸ் வழி அடிக்கப்பட்டது.

52 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஜே.டி.தி-க்கு இன்னும் ஆறு ஆட்டங்கள் எஞ்சியிருக்கின்றன.

அடுத்த நிலையில், சிலாங்கூர் எஃப்.சி 13 புள்ளிகளுடன் பின்தங்கியிருப்பதால் கிண்ணத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு ஜே.டி.தி-க்கு பிரகாசமாக உள்ளது.

கடந்த பருவத்தில் தொடர்ச்சியாக பத்தாவது முறையாக சூப்பர் லீக்கை வென்றதன் மூலம் சரித்திரம் படைத்த ஜே.டி.தி, 2014-ஆம் ஆண்டு தொடங்கி அதனை தற்காத்து வருகிறது.

இதனிடையே, பினாங்கு, பண்டாராயா அரங்கில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் பினாங்கு எஃப்.சி 1-1 என்று சிலாங்கூர் எஃப்.சி உடன் சமன் கண்டு ஒரு புள்ளியைப் பெற்றது.

பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கும் பினாங்கு எஃப்.சி-இன் ஒரே கோல் பினால்டி வழி ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் அடிக்கப்பட்டது.

சிலாங்கூரின் ஒரே கோல் முதல் பாதி ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் போடப்பட்டது.

மற்றுமொரு நிலவரத்தில், பாரோயில் தனது சொந்த அரங்கமான துவான்கு அப்துல் ரஹ்மான் அரங்கில் விளையாடிய நெகிரி செம்பிலான் எஃப்.சி மூன்று புள்ளிகளைப் பெறத் தவறியது.

நேற்றிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நெகிரி செம்பிலான் 2-1 என்று சபா எஃப்.சி-இடம் தோல்வி கண்டது.

நெகிரி செம்பிலான் எஃப்.சி-ஐ வீழ்த்தியன் மூலம், சபா, பட்டியலில் 32 புள்ளிகளோடு அதே மூன்றாம் நிலையில் உள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]