ஈப்போ, 02 மார்ச் (பெர்னாமா) -- ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து இறையறுள் பெறும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி முக்கிய உணவாக இருக்கின்றது.
நோன்பு நோற்பவர்கள், உடனடியாகப் புத்துணர்ச்சிப் பெறுவதற்கு வழி வகுக்கும் இந்த நோன்புக் கஞ்சி, உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கின்றது.
அதன் காரணமாகவே, பள்ளிவாசல்கள் தோறும் மக்களுக்காக இந்த நோன்புக் கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நோன்பிருந்தால், உடலில் நீர்வறட்சி ஏற்படும் என்பதால், அதனை தவிர்க்க நோன்பு கஞ்சி வழங்கப்படுகின்றது.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இக்கஞ்சியில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.
ரமலான் மாதம் முழுவதும் காலை முதல் மாலை வரை எதுவும் சாப்பிடாமல் நோன்பிருந்து அதனை துறந்து, பின்னர் திட உணவுகளைச் சாப்பிடுவார்கள்.
அது உடலுக்குச் சில தொந்தரவுகளைத் தரும் என்பதால் அதனை தடுப்பதற்கு, இந்த இந்த நோன்பு கஞ்சி ஓர் அற்புதமான உணவாகிறது.
அதனைக் கருத்தில் கொண்டே, ஆண்டுதோறும் பேராக்கில் உள்ள ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
தினமும் மாலை 4:30 மணிக்கு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்படுவதாகவும் ஆயிரம் பேருக்கு மேல், அனைத்து மதத்தை சேர்ந்தோரும் இதனை பெற்று செல்வதாகவும் பள்ளிவாசலின் நிர்வாக தரப்பினர் கூறினர்.
117 ஆண்டுகாலமாக முன்னெடுக்கப்படும் தங்கள் பள்ளி வாசலின் முயற்சிக்கு மக்களின் ஆதரவு உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
நோன்புக் கஞ்சியில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவக் குணம் கொண்ட பொருட்கள் உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)