உலகம்

சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் டிரம்ப்

07/03/2025 02:56 PM

வாஷிங்டன், டி.சி., 07 மார்ச் (பெர்னாமா) -- அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டோனல்ட் டிரம்ப் தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக சவூதி அரேபியாவிற்கு செல்லவிருக்கின்றார்.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் 1 லட்சம் கோடி டாலர்களுக்கு மேல் ரியாட் முதலீடு செய்யவிருப்பதால் அதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பயணத்தில், அமெரிக்காவிலிருந்து சவூதி அரேபியா இராணுவ உபகரணங்கள் வாங்குவது குறித்தும் பேசப்படும் என்று டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

''எனவே நான் அங்கு (சவூதி அரேபியா) செல்லப் போகிறேன், அவர்களுடன் எனக்கு ஒரு சிறந்த உறவு இருக்கிறது. அவர்கள் மிகவும் நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இராணுவ உபகரணங்கள் மற்றும் பல பொருட்களை வாங்குவதற்காக அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிகப் பணம் செலவிடப் போகிறார்கள்,'' என்றார் அவர். 

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் சவுதி அரேபியா முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இதனிடையே, அமெரிக்காவில் டிக்டோக் நிறுவத்தின் செயல்பாடு நீட்டிக்கப்படலாம் என்று டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

"டிக்டோக்கில் எங்களுக்கு நிறைய ஆர்வம் உள்ளது. அதில் சீனாவும் ஒரு பங்கை வகிக்கப் போகிறது. எனவே சீனா இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் என்று நம்புகிறேன். அவர்கள் (சீனா) ஒரு பங்கை வகிக்கப் போகிறார்கள். ஆனால் டிக்டோக்கில் எங்களுக்கு நிறைய ஆர்வம் உள்ளது,'' என்றார் அவர்.

ஜோ பைடன் அமெரிக்க அதிபாராக பதவி வகித்த போது, டிக்டோக் செயல்பாட்டை அந்நாட்டில் தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6.30 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]