புத்ராஜெயா, 25 ஜூன் (பெர்னாமா) - இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு, கிர்கிஸ்தான் குடியரசின் தலைவர் Sadyr Zhaparov மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டுள்ளார்.
அவரின் வருகையை ஒட்டி இன்று மலேசியா மற்றும் கிர்கிஸ்தானின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
சுற்றுலா, சுகாதாரம், உயர்கல்வி, இலக்கவியல் மாற்றம் மற்றும் இணைய பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே மேம்பாடு கண்டு வரும் ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் விதமாக அந்த ஒப்பந்தங்கள் அமைந்திருந்தன.
இன்று, புத்ராஜெயா, ஶ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் Zhaparov மற்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுற்றுலா, இலக்கவியல் மாற்றம், இணைய பாதுகாப்பு மற்றும் வரத்தகம் தொடர்பான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான், கிர்கிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் வரத்தக அமைச்சர் Bakyt Sydykov மற்றும் இலக்கவியல் மேம்பாடு மற்றும் புத்தாக்க தொழில்நுட்பகளுக்கான அமைச்சர் Azamat Jamangulov ஆகியோருக்கு இடையில் கையெழுத்திடப்பட்டன.
உயர்கல்வி துறையில் கையெழுத்திடப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிரும் கிர்கிஸ்தானின் அறிவியல், உயர்கல்வி மற்றும் புத்தாக்க அமைச்சர் Baktyiar Orozoமும் பறிமாறிக் கொண்டனர்.
இதனிடையே, சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் மற்றும் அவரது சகாவான Erkin Checheibaev இடையே, சுகாதாரம் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)