பேங்காக், 28 ஜூன் (பெர்னாமா) -- அண்மையில், தாய்லாந்தின் தென் சுற்றுலாப் பகுதிகளான புக்கெட் மற்றும் பங் ஙாவில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து அனைத்து அரசாங்க நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதோடு கண்காணிப்பை அதிகரிக்குமாறு பிரதமர் பெத்தோங்தான் ஷினாவாத் உத்தரவிட்டுள்ளார்.
அச்சம்பவம், அந்த பகுதியில் பதற்றத்தைத் தூண்டும் முயற்சி என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
நிலைமையை மதிப்பிடுவதற்கும் நெருக்கமான கண்காணிப்பை உறுதி செய்வதற்கும் தேசிய போலீஸ் படைத் தலைவர், சுற்றுலா போலீஸ் தளபதி உட்பட சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சின் நிரந்தரச் செயலாளருடன் பெத்தோங்தான் ஷினாவாத் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இவ்வாரத் தொடக்கத்தில், சொங்க்லாவில் இருந்து புக்கெட் நோக்கி பயணித்த வாகனம் ஒன்றில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அதில் சுயமாகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இவ்விவகாரத்தை கவனத்துடன் தீர்ப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் உறுதிபூண்டுள்ளதாக பெத்தோங்தான் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]