புத்ராஜெயா, 02 ஜுலை (பெர்னாமா) -- இம்மாத இறுதியில், இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையிலான வருடாந்திர கலந்துரையாடலை மலேசியாவும் இந்தோனேசியாவும் மீண்டும் தொடங்கவுள்ளன.
2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த கலந்துரையாடல் மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜகார்த்தாவிற்கு மேற்கொண்ட அலுவல் பயணத்தின் போது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தோனேசிய அதிபர் பிரபொவோ சுபியந்தோவுடன் மேற்கொண்ட சந்திப்புக்கு பிறகு இது முடிவு செய்யப்பட்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி பட்சில் தெரிவித்தார்.
கடந்த இருபது ஆண்டுகளாக நீடித்து வரும் கடல் எல்லை தொடர்பான பிரச்சனை உட்பட, நிலுவையில் உள்ள பல்வேறு இருதரப்பு பிரச்சனைகளை முன்னிலைப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையிலான இக்கலந்துரையாடல் ஒரு முக்கிய தளமாகி உள்ளதாக அவர் விளக்கினார்.
"அம்பாலாட் தொடர்பான பிரச்சனை 2-3 தசாப்தங்களுக்கும் மேலாக உள்ளது. இது ஒரு புதிய விவகாரம் அல்ல. இது விவாதிக்கப்படும் விவகாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் பிரதமர் கூறியது போல், தொழில்நுட்ப சிக்கல்கள் உட்பட பலவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே ஜூலை மாத இறுதியில் நடைபெறும் கலந்துரையாடல் தொடக்கமாக இருக்கும். முடிவாக இருக்காது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்றார் அவர்.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கு பிரதமருடன் மலேசிய உயர்மட்ட தலைவர்கள் ஜூலை 29-ஆம் தேதி ஜகார்த்தா செல்லவுள்ளனர்.
இதனிடையே, நேற்று தொடங்கி இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மேற்கொண்டுள்ள பயணம், மலேசியாவுக்கும் அனைத்துலக பங்காளிகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சி என்று ஃபஹ்மி குறிப்பிட்டுள்ளார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]