ஜோகூர் பாரு, 02 ஜூலை (பெர்னாமா) -- இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் உட்பட ஐவரைக் கைது செய்து பல்வேறு வகையான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்ததன் வழி ஜோகூரின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றின் நடவடிக்கையை அம்மாநில போலீசார் முறியடித்துள்ளனர்.
கடந்த ஜூன் 19ஆம் தேதி ஜோகூர் பாருவில் நடத்தப்பட்ட, சிறப்புச் சோதனை நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு கிட்டத்தட்ட 30 லட்சம் ரிங்கிட்டாகும்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 29 முதல் 46 வயதுக்குட்பட்ட மூன்று உள்நாட்டு ஆடவர்கள் மற்றும் இரண்டு வியட்நாமிய பெண்கள் என்று ஜோகூர் போலீஸ் தலைவர், CP Datuk M. Kumar தெரிவித்தார்.
''உள்நாட்டைச் சேர்ந்த அந்த மூன்று சந்தேக நபர்களும், 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 39 (C), செக்ஷன் 39A(1)-இன் கீழ் தேடப்பட்டு வருவதாகப் பதிவு உள்ளது. அதுமட்டுமின்றி, அந்த மூன்று உள்நாட்டு ஆடவர்களுக்கும் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் குற்றப்பதிவுகளும் உள்ளன,'' என்று அவர் கூறினார்.
சந்தேக நபர்கள் அனைவரும், வியாழக்கிழமை வரை விசாரணைக்காக 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 39B-இன் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)