ஆயர் ஈத்தாம், 03 ஜூலை (பெர்னாமா) -- நேற்றிரவு, ஜோகூர், ஆயர் ஈத்தாம், தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 80.7-வது கிலோமீட்டரில் சுற்றுலாப் பேருந்து, வோல்வோ ரகக் இழுவை லாரி மற்றும் டேங்கர் (tanker) லாரியை உட்படுத்தி நிகழ்ந்த விபத்தில் இரு ஆடவர்கள் மரணமடைந்த வேளையில் 16 பேர் காயங்களுக்கு ஆளாகினர்.
மரணமடைந்த 43 வயதுடைய ஹிடிர்மான மற்றும் 44 வயதுடைய சுல்ஹடி ஆகிய இருவருமே இந்தோனேசியர்கள் என்று ஆயர் ஈத்தாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முஹமட் ஷாமின் முஹமட் சலிக்கின் தெரிவித்தார்.
வாகனத்தினுள் சிக்கிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே அவ்விருவரும் உயிரிழந்ததாக முஹமட் ஷாமின் கூறினார்.
இச்சம்பவம் குறித்து நள்ளிரவு மணி 12.44-க்கு தங்கள் தரப்பு அவசர அழைப்பை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஆயர் ஈத்தாம் மற்றும் யோங் பெங் தீயணைப்பு மீட்பு நிலையங்களைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக முஹமட் ஷாமின் விவரித்தார்.
சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி பேருந்தில் சிக்கிக்கொண்ட அவ்விரு ஆடவர்களும் வெளியே கொண்டு வரப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
காயங்களுக்கு ஆளாகிய பேருந்து ஓட்டுநர் உட்பட அதில் பயணித்த 16 பேரும் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் 28 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
வியாழக்கிழமை அதிகாலை மணி 3.03-க்கு மீட்புப் பணிகள் நிறைவடைந்தன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]